நாட்டு மக்கள் கவனமாக இருந்தால் முழு ஊரடங்கு தேவை இல்லை விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்

கொரோனா நோய் பாதிப்பு பகுதியில் மட்டுமே கட்டுப்பாடு அவசியம் என்றும், பொதுமக்கள் கவனமாக இருந்தால் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டியது இல்லை என்றும் பிரதமர் மோடி டெலி விஷனில் நேற்று இரவு உரையாற்றியபோது கூறினார்.

புதுடெல்லி, கொரோனா என்னும் கொடிய வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, நாடு முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் முதல் அலையில் ஒரு நாளின் அதிகபட்ச பாதிப்பு 1 லட்சத்தை எட்டியிராத நிலையில், இந்த இரண்டாவது அலை, கடந்த சில நாட்களாக தினந்தோறும் 2 லட்சத்துக்கு அதிகமானவர்களை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது.

சாதாரண மனிதர்கள் தொடங்கி முதல்-மந்திரிகள், கவர்னர்கள், மத்திய மந்திரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என யாரையும் விட்டு வைக்காமல் கொரோனா தாக்கி வருகிறது.

அதே நேரத்தில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கும் கடந்த ஜனவரி மாதம் அவசர கால பயன்பாட்டு அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் வழங்கியது. அதைத் தொடர்ந்து அதே மாதத்தின் 16-ந் தேதி இவ்விரு தடுப்பூசிகளும் பயன்பாட்டில் வந்து விட்டன.

அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் இந்த தடுப்பூசி திட்டத்தின் மூன்றாவது கட்டம் தொடங்குகிறது. அப்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதனால் தடுப்பூசியின் தேவை பெருகி உள்ளது. கொரோனாவின் தீவிர பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சையில் ஆக்சிஜன் (பிராண வாயு) தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த தருணத்தில் கொரோனா தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து நேற்று இரவு 8.45 மணிக்கு டெலிவிஷனில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது.

கொரோனா வைரசுக்கு எதிரான மிகப்பெரிய போரை நாடு மீண்டும் நடத்தி வருகிறது. சில வாரங்களாக நிலைமை கட்டுக்குள் இருந்தது. ஆனால் இப்போது 2-வது அலையானது, புயல்போல வந்து விட்டது. நீங்கள் அனைவரும் சந்தித்து வருகிற கஷ்டங்களை நான் அறிந்திருக்கிறேன். உங்கள் அன்பானவர்களை இழந்து தவிக்கிறவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொற்று நோய்க்காலத்தில் சேவையாற்றி வருகிற டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவ சார்பு பணியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், பாதுகாப்பு படையினர், போலீசார் என அனைவரும், மற்றவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு தங்களது உயிர்களைப் பணயம் வைத்து சேவையாற்றுவதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மருந்து நிறுவனங்கள் மருந்து உற்பத்தியை அதிகரித்துள்ளன. கடந்த ஜனவரி, பிப்ரவரியில் இருந்ததை விட கூடுதலான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

மிக வேகமாக மருந்துகளை தயாரித்து அளிக்கிற வலுவான மருந்து துறையை இந்தியா பெற்றுள்ளது..

இடம் பெயர்ந்து வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்கள், இந்த தொற்று பரவலுக்கு மத்தியில் சொந்த மாநிலங்களுக்கு போக தேவையில்லை. தொற்றால் அவர்களது வேலை பாதிக்காது.

அவர்கள் எங்கே இருக்கிறார்களோ, அங்கேயே இருப்பதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும். மாநில அரசு அளிக்கிற உத்தரவாதம், அவர்கள் தாங்கள் வசிக்கும் நகரத்திலேயே விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காது என்று நம்புவதற்கு உதவும்.

தடுப்பூசி தொடர்பாக ஒரு முக்கியமான முடிவை எடுத்தோம். மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் என்று அறிவித்தோம்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் 2 தடுப்பூசிகளை நாம் வைத்திருப்பதால், இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை தொடங்க முடிந்தது.

உலகிலேயே மிக மலிவான விலையில் தடுப்பூசி வழங்குகிற நாடு இந்தியாதான். இந்தியாவில் போதுமான குளிர்பதன வசதிகள் இருக்கின்றன.

நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்து இருக்கிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

மத்திய அரசு, மாநில அரசு, தனியார் துறையினர் என அனைவரும் தேவைப்படுகிற ஒவ்வொருவருக்கும் மருத்துவ ஆக்சிஜன் சரியான நேரத்தில் கிடைக்க உறுதி பூண்டுள்ளோம்.

கடந்த ஆண்டு நிலைமை வேறுமாதிரி இருந்தது. அப்போது கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் இல்லை. நம்மிடம் பரிசோதனைக்கூடங்கள் இல்லாமல் இருந்தது. பி.பி.இ. என்னும் சுய பாதுகாப்பு கவச உபகரணங்கள் இல்லை. சிகிச்சை பற்றிய மருத்துவ அறிவு இல்லாத நிலை இருந்தது.

ஆனால் இப்போது குறைந்த கால அவகாசத்தில் நாம் அதில் எல்லாம் முன்னேற்றம் கண்டிருக்கிறோம். டாக்டர்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள். இதுவரை இல்லாத வகையில் உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள்.

அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை ஒழுங்குடன் பின்பற்ற வேண்டும். கவனமாக இருக்க வேண்டும். நோய்க்கட்டுப்பாட்டு மண்டலங்களில் கட்டுப்பாடு அவசியம்.

வதந்திகளுக்கு எதிரான விழிப்புணர்வை பரப்ப வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. பொது முடக்கத்துக்கு எதிராக நாம் காத்துக்கொள்ள வேண்டும். இதை மாநிலங்களும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா கடுமையான போராட்டத்தை நடத்தி உள்ளது. இதற்கான பெருமை உங்களைத்தான் (பொதுமக்களை) சேரும்.

பொதுமக்களாகிய உங்களது பங்கேற்பு என்ற ஆயுதத்தின் மூலம் கொரோனா வைரஸ் தொற்றை தோற்கடிக்க முடியும். தேவைப்படுகிற நேரத்தில் உதவுகிற மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.

கொரோனா கால விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய இளைஞர்கள் சிறிய குழுக்களை அமைத்து செயல்படுங்கள். இதெல்லாம் நடந்து விட்டால், அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது வராது. இரவுநேர ஊரடங்கு போட வேண்டியதில்லை. பொதுமுடக்கம் தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

dailythanthi