RM2 மில்லியன் கையூட்டு : கு நானின் மேல்முறையீட்டை நீதிமன்றம் நாளை செவிமடுக்கும்

ஒரு தொழிலதிபரிடமிருந்து, RM2 மில்லியன் கையூட்டு வாங்கியதற்கான குற்றத்தீர்ப்பு மற்றும் தண்டனைக்கு எதிராக, முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோரின் மேல்முறையீட்டை மேன்முறையீட்டு நீதிமன்றம் நாளை செவிமடுக்கும்.

ஏப்ரல் 22 மட்டுமின்றி, ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 26 ஆகியத் தேதிகளையும் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

70 வயதான தெங்கு அட்னான் அல்லது ‘கு நான்’ என அழைக்கப்படும் அவர், அவரது குற்றத்தீர்ப்பு மற்றும் தண்டனைக்கு எதிராக, கடந்த டிசம்பர் 21-ம் தேதி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அதே நாளில், உயர்நீதிமன்ற நீதிபதி, கு நான் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, அவருக்கு 12 மாதச் சிறைத்தண்டனையும், RM2 மில்லியன் தண்டமும் விதித்தார்.

இருப்பினும், அந்த புத்ராஜெயா எம்.பி.யின் விண்ணப்பத்திற்கு இணங்க, மேல்முறையீடு முடிவு செய்யப்படும் வரை, சிறைத் தண்டனையையும் தண்டத்தையும் நிறுத்தி வைக்க நீதிமன்றம் அனுமதித்தது.

எசட் காயாமாஸ் சென். பெர். (ஏ.கே.எஸ்.பி) நிறுவனத்தின் இயக்குநர், சாய் கின் கோங்-இடமிருந்து, அவர் தொடர்புடைய ஒரு வங்கிக் கணக்கில், காசோலை மூலம் தனக்காக RM2 மில்லியனைப் பெற்றுக்கொண்டதற்காக, ஓர் அரசு ஊழியர் மற்றும் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் என்ற முறையில் தெங்கு அட்னான் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஜூன் 14, 2016-ல், கோலாலம்பூர், புசாட் பண்டார் டாமான்சாராவில் உள்ள சிஐஎம்பி வங்கிக் கிளையில் அக்குற்றத்தைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின், பிரிவு 165-இன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது தண்டம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

  • பெர்னாமா