டாக்டர் ஆடாம் : கல்வித்துறையில் 4,868 கோவிட் -19 நேர்வுகள்

2021 ஜனவரி 1 முதல் 2021 ஏப்ரல் 20 வரை, நாட்டின் கல்வித்துறை சம்பந்தப்பட்ட மொத்தம் 4,868 நேர்வுகளுடன், மொத்தம் 83 கோவிட் -19 திரளைகள், சுகாதார அமைச்சின் தேசிய சிபிஆர்சி-ஆல் புகாரளிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார்.

“மொத்த 83 திரளைகளில், 2,617 நேர்வுகள் கொண்ட மொத்தம் 49 (59.04 விழுக்காடு) திரளைகள் இன்னும் செயலில் உள்ளன, மேலும் 2,251 நேர்வுகள் கொண்ட 34 (40.96 விழுக்காடு) திரளைகள் நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் விளக்கினார்.

மொத்தத் திரளைகளில், மொத்தம் 39 (46.99 விழுக்காடு) திரளைகளில் 1,420 நேர்வுகள், மலேசியக் கல்வி அமைச்சின் பள்ளிகள் அல்லது அதன் நிறுவனங்களின் துணைப்பிரிவுகளை உள்ளடக்கியது.

“(இதற்கிடையில்) உயர்க்கல்வி துணைப்பிரிவு சம்பந்தப்பட்ட 1,870 நேர்வுகளுடன் 19 திரளைகள் (22.89 விழுக்காடு), பிறக் கல்வி துணைப்பிரிவு சம்பந்தப்பட்ட 1,578 நேர்வுகளுடன் 25 (30.12 விழுக்காடு) திரளைகள் உள்ளன,” என்று அவர் மேலும் விளக்கினார்.

பாதுகாப்பான சூழலில் தொடர்ச்சியான கற்றல் மற்றும் பயிற்சியில் இருந்து மாணவர்களும் பயிற்சியாளர்களும் பின்வாங்காமல் இருப்பதை உறுதி செய்வதில் அனைத்து கல்வித் துறையாளர்களின் உறுதிப்பாட்டையும் சுகாதார அமைச்சு வரவேற்கிறது என்று டாக்டர் ஆடாம் கூறினார்.

எனவே, கோவிட் -19 தொற்றைக் கையாள்வதில் அனைத்து எஸ்ஓபி எப்போதும் கடைபிடிக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் சுகாதார அமைச்சு நினைவூட்ட விரும்புகிறது என்றார் அவர்.