RM975 நிலுவைத் தொகைக்காக ஏலம் விடப்பட்ட வீட்டுக்குத் தீர்வு கிடைத்தது

RM975 நிலுவைத் தொகை காரணமாக ஏலம் விடப்பட்ட வீட்டுப் பிரச்சனை வழக்கு ஒன்று, கடன் கொடுத்த வங்கிக்கும் சொத்து உரிமையாளருக்கும் இடையில் ஒரு  தீர்வு எட்டப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிகரமாக தீர்க்கப்பட்டது.

முன்னதாக, இந்தப் பிரச்சினையை எழுப்பிய மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்), அவ்வீட்டில் துண்டிக்கப்பட்ட நீர் மற்றும் மின்சார விநியோகங்களும் மீண்டும் நிறுவப்பட்டதாகக் கூறியது.

“இரு தரப்பினருக்கும் இடையே ஒரு நல்ல தீர்வு எட்டப்பட்டுள்ளது என்பதை எங்கள் வழக்கறிஞர்கள் விளக்கினர்.

“பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையினால், தீர்வின் உள்ளடக்கங்கள் பற்றிய விவரங்களை வெளியிட முடியவில்லை,” என்று பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் கூறினார்.

ஏப்ரல் 7-ஆம் தேதி, பி லட்சுமியும் அவரது மகள் எம் மோகனாவும் தலைநகரில் உள்ள தேசிய வங்கி கட்டிடத்தின் முன் கூடி, இவ்விவகாரத்தில் அவ்வங்கியின் தலையீட்டைக் கோரினர்.

லட்சுமி 2001-ஆம் ஆண்டில் வீட்டை வாங்கியதாகவும், 20 ஆண்டுகளில் வங்கிக் கடனை மாதந்தோறும் RM268-ஆக, இதுவரையில் RM31,500 செலுத்தியுள்ளதாகவும் கூறினார்.

2001 முதல் மார்ச் 2020 வரை, லட்சுமி தானியங்கி (ஆட்டோ டெபிட்) முறையில் மாதாந்திரத் தவணைகளைச் செலுத்தியுள்ளார், நிலுவைத் தொகை ஏதும் இல்லை.

இருப்பினும், ஜூலை 2018-ல், வங்கி லெட்சுமிக்குத் தெரிவிக்காமல், மாதாந்திரக் கொடுப்பனவை அதிகரித்தது, இதனால் அவரது மாதாந்திரக் கட்டணம் போதுமானதாக இல்லாததால், மூன்று மாத நிலுவைத் தொகை ஏற்பட்டது.

இதற்கிடையில், அருட்செல்வன் வங்கி மற்றும் லட்சுமியை இலவசமாகப் பிரதிநிதித்த வழகுரைஞர்கள் சான் யென் ஹுய் மற்றும் தேரன்ஸ் தெங் இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.