கால்கள், தோள்களில் ஏற்பட்ட பலத்தக் காயங்களால் கணபதி இறந்தார் – பிரேதப் பரிசோதனை

காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு, மருத்துவமனையில் இறந்த கணபதியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள், அவரது கால்களிலும் தோள்களிலும் ஏற்பட்ட பலத்த காயங்களினால்தான் அவர் இறந்தார் எனக் கூறுவதாக அவரது குடும்ப வழக்கறிஞர் கே கணேஷ் தெரிவித்துள்ளார்.

“இன்று (நேற்று) கோலாலம்பூர் மருத்துவமனையின் நோயியல் துறையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பிரேதப் பரிசோதனை முடிவுகள் குறித்து அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

“கணபதி கால்கள் மற்றும் தோள்களில் ஏற்பட்ட பலத்த காயங்களால் இறந்துவிட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

பிரேதப் பரிசோதனை முடிவுகளைக் குடும்பத்தினரிடம் மருத்துவமனை விளக்கமளித்தபோது, ​​மரண வழக்கை விசாரிக்கும் ஓர் அதிகாரியும் உடன் இருந்தார் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், குடும்பத்திற்கு இன்னும் முழுப் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை என்று கணேஷ் கூறினார்.

“இறந்த நாளில் எட்டு மணி நேரம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இன்று அறிக்கையின் முடிவுகள் குறித்து எங்களுக்கு அறிவிக்கப்பட்டது, ஆனால் இன்னும் அறிக்கை கிடைக்கவில்லை.

“இப்போது, ​​இந்த வழக்கை முழுமையாக விசாரிப்போம் என்று கொடுத்த உறுதிமொழியைக் காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக தனது தரப்பு காத்திருப்பதாகக் கோம்பாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அரிஃபாய் தாராவே கூறியதை அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவையில் கேள்வி எழுப்பப்படும்

இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக காவற்படைத் தலைவர் அப்துல் ஹமீத் படோர் மற்றும் உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் ஆகியோரைத் தொடர்பு கொள்ளப்போவதாக மனிதவள அமைச்சர் எம் சரவணன் தெரிவித்தார்.

“இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் பெறவும், அதன் வளர்ச்சியை அறியவும் நான் காவற்படைத் தலைவரையும் உள்துறை அமைச்சரையும் தொடர்புகொள்வேன்.

“இந்த விவகாரம் அமைச்சரவைக் கூட்டத்திலும் எழுப்பப்படும், இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது, இது பி.டி.ஆர்.எம். மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குறைக்கக்கூடும்.

“இந்த வழக்கின் விசாரணை வெளிப்படையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டியப் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது, மேலும் பொதுமக்கள் அவநம்பிக்கையைத் தவிர்ப்பதற்கு உடனடியாக அதை மேற்கொள்ள வேண்டும்,” என்று ம.இ.கா. துணைத் தலைவரான அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.