போலிஸ் நேர்மை சிக்கல்கள் : விரைவில் நான் கவனம் செலுத்துவேன் – அக்ரில் சானி

புதியத் தேசியக் காவல்துறைத் தலைவர், அக்ரில் சானி அப்துல்லா சானி, பாதுகாப்புப் படையினரின் நேர்மை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான தகவல்களை, ஊடகங்களுக்கான ஒரு சிறப்பு அமர்வில் விரைவில் முன்வைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

தனது முன்னோடி அப்துல் ஹமீட் படோர் எழுப்பியப் போலிஸ் படையின் நேர்மை குறித்து கருத்து கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

“சிக்கல்களின் அடிப்படைக்கு ஏற்ப என்னென்ன விஷயங்களைக் காண வேண்டும் மற்றும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நான் முன்வைப்பேன். நாங்கள் ஓர் அமர்வில் விளக்கப்படுத்தும் வரை காத்திருங்கள்,” என்று அக்ரில் சானி கூறினார்.

கோலாலம்பூர், புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்தில், இன்று பணி கையளிப்பு விழாவுக்குப் பிறகு, ஹமீட்டுடன் தேசியக் காவல்துறைத் தலைவராக தனது முதல் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.

கடந்த வாரம், காவற்படையில் அரசியல் தலையீடுகள் குறித்து ஹமீட் கடுமையாக விமர்சித்தார், குறிப்பாக உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடினின், போலிசாரின் தினசரி கடமைகள் மற்றும் மூத்தக் காவல்துறை அதிகாரிகளை நியமித்தல் போன்ற நடவடிக்கைகளை அவர் விமர்சித்தார்.

போலிஸ் படையில், அதிகார அத்துமீறல் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக தான் மேற்கொண்ட முயற்சிகளை விவரித்தபோது, ஹமீட் தனது அணியினரின் நேர்மை குறித்த பிரச்சினையையும் எழுப்பினார்.