பி.கே.பி.பி. மாநிலங்களுக்கு இடையிலான சுற்றுலா அனுமதி இடைநிறுத்தம்

மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.பி) கீழ் உள்ள  மாநிலங்களுக்கு இடையேயான சுற்றுலா நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படுவதாக மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார்.

மார்ச் 2020 முதல் கோவிட் -19 தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறைக்கு உதவ, புத்ராஜெயா ஒரு “பசுமை பயணக் குமிழி”-ஐ அறிமுகப்படுத்திய இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

முன்னதாக, மார்ச் மாதத்தின் நடுவில், தினசரி நேர்வுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான சுற்றுலா பயணங்கள் அனுமதிக்கப்பட்டன.

இருப்பினும், ஏப்ரல் மாத இடையில், நாடு கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் புதிய எழுச்சியை எதிர்கொண்டுள்ளது.

“பயண முகவர் நிறுவனங்களின் மூலம், பி.கே.பி.பி.யின் கீழ் உள்ள பகுதிகளுக்கான சுற்றுலா பயண அனுமதிகளை இடைநிறுத்தம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

“அனுமதிக்கப்பட்ட பயணங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த மாநிலங்களில், மாவட்டங்களுக்கு இடையில் பயணம் செய்ய அரசாங்கம் அனுமதிப்பதால், பி.கே.பி.பி.யின் கீழுள்ள மாநிலங்களில் சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

மார்ச் 10-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட “பசுமை பயணக் குமிழி”, பி.கே.பி.பி. மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், பயண முகவர் சேவைகளைப் பயன்படுத்தி பிற பி.கே.பி.பி. மாநிலங்களுக்குச் செல்ல அனுமதித்தது.

கோவிட் -19 தொற்றுநோயால், 2020-ஆம் ஆண்டில், உள்ளூர் சுற்றுலாத் துறை சுமார் RM100 பில்லியன் இழப்பைச் சந்தித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.