இலங்கையில் கொரோனா 3-ஆவது அலை – நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

இலங்கையில் கோவிட்-19 மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (மே 04) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் மூன்றாவது அலையின் தாக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலான அமைச்சரவை பத்திரம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சியினால் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.

இலங்கையில் கடந்த காலங்களில் அதிகளவிலான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு கடந்த காலங்களில் அதிகளவிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், கோவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 14,455 படுக்கைகளின் எண்ணிக்கையை, மேலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, மேலும் 3000 கட்டில்களை புதிதாக சேர்ப்பதற்கு, கோவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கை எதிர்வரும் ஓரிரு தினங்களில் முன்னெடுக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

கோவிட் 3வது அலை எவ்வாறு ஏற்பட்டது?

இலங்கையை உலுக்கும் கொரோனா மூன்றாவது அலை

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் நாட்டு மக்களின் செயற்பாடுகள் காரணமாக கோவிட் 3வது அலை ஏற்பட்டதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.

நாட்டு மக்களின் செயற்பாடுகள் காரணமாக, தற்போது மிகவும் அபாயகரமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் பெருமளவிலான மக்கள் ஆடை, அத்தியாவசிய பொருட்கள் என பல்வேறு பொருள் கொள்வனவிற்காக சுகாதார வழிமுறையை மீறி செயற்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், புத்தாண்டு முடிவடைந்ததன் பின்னர், இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்திருந்தது.

குறிப்பாக நாளொன்றில் 500 தொற்றாளர்கள் கூட அடையாளம் காணப்படாதிருந்த இலங்கையில், தற்போது 1900திற்கும் அதிகமான தொற்றாளர்கள் நாளொன்றில் அடையாளம் காணப்படும் அளவிற்கு கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மருத்துவமனைகளில் கோவிட் தொற்றாளர்களுக்கான சிகிச்சை வழங்க போதிய இடவசதி காணப்படாத பின்னணியில், சில கோவிட் தொற்றாளர்கள் தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக உள்நாட்டு ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டிருந்தன.

இவ்வாறான நிலையில், தற்போது மருத்துவமனைகளில் இடவசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறுகின்றார்.

இலங்கையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகின்றதா?

இலங்கையை உலுக்கும் கொரோனா மூன்றாவது அலை

இலங்கையில் இதுவரை ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவவில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை சுகாதார பிரிவிற்கு இரண்டு நிறுவனங்களினால் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது நாட்டிற்கு கேள்வியை விடவும், மூன்று மடங்கு ஆக்சிஜனை விநியோகிக்க முடியும் எனவும் அந்த நிறுவனங்கள் தமக்கு அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் விநியோக பிரிவு தெரிவித்துள்ளது.

அதனால், நாட்டின் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை உரிய முறையில் வழங்க முடியும் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா?

நாட்டின் 25 மாவட்டங்களிலும் தற்போது கோவிட் வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்ற நிலையில், அதிகளவிலான கோவிட் தொற்றாளர்கள் பதிவாகும் இடங்கள் மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக நாட்டின் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் போலீஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கோவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

அதேபோன்று, கோவிட் தொற்றாளர்கள் அதிகரிக்கும் பகுதிகள், அடையாளம் காணப்பட்டு, அந்த பகுதிகளை மாத்திரம் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதைவிடுத்து, நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் கோவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனைய நிறுவனங்கள், மதத் தலங்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, பொது போக்குவரத்துக்களை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டில் பல்வேறு பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பில் இன்று அல்லது நாளை தீர்மானமொன்று எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

மேலும், சுற்றுலாத்துறையை வழமை போன்று, கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, கோவிட் தொற்று பெரும்பாலும் தலைநகர் உள்ளடங்களாக மேல் மாகாணத்திலேயே அதிகளவில் காணப்படுகின்றது,

இலங்கையில் இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 676 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 709 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் இதுவரையான காலம் வரை நாளொன்றில் பதிவான அதிகளவிலான கோவிட் தொற்றாளர்கள் நேற்றைய தினம் (மே 03) பதிவாகியிருந்தனர்.

1923 தொற்றாளர்கள் நேற்று பதிவாகியிருந்ததுடன், நேற்றைய தினத்தில் மாத்திரம் 13 கோவிட் மரணங்கள் பதிவானதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், 14,758 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் கோவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BBC