ஆக்சிஜன் குழாயில் ‘பிர‌ஷர்’ கோளாறு சரி செய்யப்பட்டது- மருத்துவமனை டீன் தகவல்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 10 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.

ஆக்சிஜன் குழாயில் ‘பிர‌ஷர்’ கோளாறு சரி செய்யப்பட்டது- மருத்துவமனை டீன் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதில் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் திடீரென ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பதட்டம் அடைந்த டாக்டர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளின் உதவியை நாடினர்.

இதற்குள் ஆக்சிஜன் கிடைக்காமல் 13 நோயாளிகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி அறிந்ததும் கலெக்டர் ஜான் லூயிஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் “ஆக்சிஜன் செல்லும் குழாயில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு ஏற்பட்டது. போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது என்று கூறினார்.

ஆக்சிஜன் சிலிண்டர்கள்

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக கூறி நேற்று மதியம் டாக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் செங்கல்பட்டு உதவி கலெக்டர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆக்சிஜன் குழாயில் உள்ள பிர‌ஷரில் ஏற்பட்ட மாறுதலே நோயாளிகளின் இறப்புக்கு காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. உடனடியாக இந்த கோளாறு சரி செய்யப்பட்டது.

மேலும் ஆஸ்பத்திரிக்கு தேவையான ஆக்சிஜனும் தேவையாள அளவு கையிருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இது குறித்து ஆஸ்பத்திரி டீன் முத்துக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆக்சிஜன் குழாயில் பிர‌ஷரில் ஏற்பட்ட கோளாறால் உயிரிழப்பு ஏற்பட்டது. உடனடியாக இந்த கோளாறு சரி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 10 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.

கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் குழாயில் பழுது எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

maalaimalar