அரசியல் தலையீடு என்றால் என்ன, சைட் ஹமீட் கேள்வி

அரச மலேசியக் காவல் படைக்கும் அமைச்சருக்கும் இடையில் தவறான புரிதல்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இது உள்ளுக்குள்ளேயே விவாதிக்கப்பட வேண்டும் என்று, அரசியல் மூத்தத் தலைவர் சைட் ஹமீட் அல்பார் முன்னாள் தேசியக் காவல்துறைத் தலைவர் (ஐஜிபி) அப்துல் ஹமீட் படோரின் வெளிப்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

2008 மார்ச் முதல் 2009 ஏப்ரல் வரையில், உள்துறை அமைச்சராக இருந்த சைட் ஹமீட், அரசு நிறுவனங்கள் மற்றும் சக நபர்களின் மரியாதை பேணப்பட வேண்டும் என்றார்.

“எனவே, இது போன்ற விஷயங்கள்… நமது சேவைகள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் எனக்குள்ள அனுபவத்தின் அடிப்படையில், நாம் நமக்குள்ளேயே விவாதித்துக் கொள்வது நல்லது.

“காவல்துறைத் தலைவருக்கும் அமைச்சருக்கும் இடையில் அல்லது போலிஸ் சேவைகள் ஆணையத்தின் (எஸ்.பி.பி.) சூழலில்…

“இதன் மூலம், எல்லா விஷயங்களும் அவர்களுக்குள்ளேயே இருக்கும்.

“நாம் ஒருவருக்கொருவரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை அறிந்திருக்க வேண்டும்.

“அதிகாரப்பூர்வமான இரகசியங்கள் சட்டத்தை இரு தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

ஏப்ரல் 30-ம் தேதி, ஐ.ஜி.பி.யாகத் தனது கடைசி பத்திரிகையாளர் சந்திப்பில், முன்னாள் தலைமை நீதிபதி போன்ற தன்னலம் பேணாத் தரப்பினர் எஸ்.பி.பி.க்குத் தலைமையேற்க வேண்டுமென ஹமீட் கூறினார்.

காவல்துறையின் உள் விவகாரங்களில் சில அரசியல்வாதிகள் அல்லது அமைச்சர்கள் எவ்வாறு தலையிட்டனர் என்பது உட்பட பல குற்றச்சாட்டுகளையும் அப்துல் ஹமீட் வெளியிட்டார்.

இந்த விவகாரம், அரசாங்கத் தலைமை செயலாளர் மொஹமட் ஸூகி அலிக்கும் பிரதமர் முஹைதீன் யாசினுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், எஸ்.பி.பி. தலைவரும், உள்துறை அமைச்சருமான ஹம்சா ஜைனுடினுடனான தனது உறவு மோசமாக இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

அவரைப் பொறுத்தவரை, அமைச்சர் கொள்கை வகுப்பதில் மட்டுமே ஈடுபட வேண்டும், போலிஸ் படையின் மூத்த அதிகாரிகளை நியமிப்பதில் அவரது தலையீடு இருக்கக்கூடாது.

எஸ்.பி.பி.-யின் பலவீனத்தையும் அப்துல் ஹமீட் எழுப்பினார், அவரைப் பொறுத்தவரை ஆண்டுக்கு நான்கு முறை மட்டுமே அவர்கள் சந்திக்கிறார்கள்.

“ஒவ்வொரு மாதமும் (எஸ்.பி.பி) கூட்டம் நடக்க வேண்டும். கூட்டம் நடந்தாலும், இரண்டு மணி நேரம், காபி குடிப்பது போல இருக்கும். சற்றும் கவனம் செலுத்தாமல்,” என்று முன்னாள் காவல்துறைத் தலைவர் கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இப்போது பெர்சத்து தலைவராக இருக்கும் சைட் ஹமீட், அப்துல் ஹமீட் ஓய்வு பெற்றிருந்தாலும், அதிகாரப்பூர்வ இரகசியங்கள் சட்டத்தில் (ஓஎஸ்ஏ) குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களுக்கு அவர் இன்னும் கட்டுப்பட வேண்டியிருக்கிறது என்று கூறினார்.

“(முன்னாள்) தேசியக் காவல்துறைத் தலைவர் தனது சேவையை விட்டு வெளியேறிவிட்டார்… நீங்கள் சேவையை விட்டு வெளியேறினாலும், ​​நீங்கள் இன்னும் சில விஷயங்களுக்கு இணங்க வேண்டியுள்ளது.

“அரசியல் தலையீடு என அவர் என்ன சொல்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை.

“இந்த அரசியல் தலையீடு என்பது என்ன? ஏனெனில், காவல்துறைக்கென எஸ்.பி.பி. உண்டு. இது அந்த ஆணையத்துடன் (எஸ்.பி.பி) விவாதிக்கப்பட வேண்டும்,” என்றார்.

முன்னதாக, முன்னாள் தேசியக் காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.பி.) மூசா ஹசான், போலிஸ் விவகாரங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு அந்நியமான ஒன்றல்ல என்றும், அப்துல் ஹமீட் தலைமை பொறுப்பில் இருந்தபோது மட்டும் அது நடக்கவில்லை என்றும் கூறினார்.

இருப்பினும், நவம்பர் 2006 முதல் 2010 செப்டம்பர் வரை ஐ.ஜி.பி.யாக இருந்த மூசா, சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் பெயரைக் குறிப்பிடாமல், அவர்களுக்கு வேண்டியக் கும்பல்களை விடுவிக்கக் காவல்துறைக்குக் கட்டளை இட்டதாகவும், மேலும் சில அரசியல்வாதிகள், அவருக்கேத் தெரியாமல் மாநிலக் காவல்துறைத் தலைவருக்கு அறிவுறுத்தல்களைக் கொடுத்துள்ளதாகவும் சொன்னார்.

இதுபோன்ற அரசியல் தலையீடுகள், போலிஸ் விசாரணை செயல்முறையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது என்று மூசா கூறினார்.