கிழக்கு கடற்கரைக்கான போக்குவரத்து நெரிசலானது

தலைநகர் இப்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.) கீழ் இருந்தாலும், கிழக்கு கடற்கரைக்கானப் போக்குவரத்து ஓட்டம் இன்று அதிகாலை முதல் நெரிசலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (எல்.எல்.எம்.) செய்தித் தொடர்பாளர், இன்று காலை 8 மணியளவில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, குறிப்பாக பெந்தோங் டோல் பிளாசாவுக்கு முந்தையப் பகுதியில் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பெர்னாமா தொடர்பு கொண்டபோது தெரிவித்தார். ​​

அவரைப் பொறுத்தவரை, சாலையைப் பயன்படுத்துபவர்களின் அதிகரிப்பு தவிர, பெந்தோங் டோல் பிளாசா சாலைத் தடையில் காவல்துறையினர் மேற்கொண்ட கடுமையானப் பரிசோதனையைத் தொடர்ந்து நெரிசல் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

எல்.எல்.எம். தனது முகநூல் பக்கத்தில் இன்று அதிகாலை முதல் சாலையில் போக்குவரத்து நெரிசல்களில் வாகனங்கள் வரிசையில் நிற்பதைக் காட்டும் படங்களையும் பதிவேற்றியுள்ளது.

இதற்கிடையில், குவா முசாங், பாசீர் பூத்தே மற்றும் ஜெலி ஆகிய மூன்று நுழைவு வழித்தடங்களை உள்ளடக்கிய, மாநிலத்திற்குள் நுழையும் வாகனங்களின் நடமாட்டம் நேற்று முதல் அதிகரித்துள்ளதைக் கிளந்தான் காவல்துறைத் தலைவர் ஷஃபியான் மமாட் பெர்னாமாவிடம் உறுதிப்படுத்தினார்.

நேற்று மாநிலத்தின் நுழைவாயிலில் சாலைத் தடைகளை அமல்படுத்தியபோது, ​​மாநிலத்தைக் கடக்க அனுமதி கடிதம் இல்லாத 75 வாகனங்கள் திரும்பிச் செல்ல உத்தரவிடப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

மேலும் கருத்து தெரிவித்த ஷஃபியான், ஏப்ரல் 16 முதல் மே 17 வரை பி.கே.பி.யின் கீழ் இருக்கும் அம்மாநிலத்தில், மேலும் ஐந்து சாலைத் தடைகளைத் தனது தரப்பினர் அதிகரித்தது என்றார்.

“இது தவிர, பேரங்காடி போன்ற பொது இடங்களில், எஸ்ஓபிக்களுக்கு மக்கள் இணங்குவதைக் கண்காணிக்க, அமலாக்க குழுக்களின் எண்ணிக்கையையும் காவல்துறை அதிகரிக்கும்,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா