லோக் : பி.கே.பி.பி. பகுதிகளில், மாவட்ட எல்லைகளைக் கடக்கும் தடையை விளக்கவும்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி.) கீழ் உள்ள மாநிலங்களில், மாவட்ட எல்லைகளைக் கடக்கும் தடையைப் பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி விளக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய அறிவிப்பால் குழப்பமடைந்த லோக், பி.கே.பி.பி. மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி) கீழ் உள்ள பகுதிகளுக்கு இடையேயான வேறுபாடுகளைத் தெளிவுபடுத்த முன்வருமாறு இஸ்மாயிலைக் கேட்டுக்கொண்டார்.

“நான் அவரது விளக்கத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன், ஆனால் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை இந்த விஷயத்தைச் சிறிதும் தொடவில்லை.

“இது போன்ற ஒரு முக்கியமான அறிவிப்பை, அமைச்சர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்க வேண்டும், இதனால் செயல்படுத்தல் வழிமுறைகள் குறித்து மேலும் தெளிவுபடுத்த முடியும்.

“பி.கே.பி.பி. மாநிலங்களில், மாவட்ட எல்லைகளைக் கடக்கும் தடை ஏன் செயல்படுத்தப்படுகிறது என்று விளக்கமளிக்க பாதுகாப்பு அமைச்சருக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்,” என அந்த சிரம்பான் எம்.பி. கூறினார்.

நேற்று, மே 10 முதல் ஜூன் 6 வரை நான்கு வாரங்களுக்கு, மாவட்ட எல்லைகளைக் கடக்கும் பயணத் தடை நாடு முழுவதும் நீட்டிக்கப்படுவதாக இஸ்மாயில் அறிவித்தார்.

கூட்டம் கூடுதலை உள்ளடக்கிய அனைத்து சமூக நடவடிக்கைகளையும் அரசாங்கம் தடை செய்கிறது.

சமீபத்திய இந்த வழிகாட்டுதல்கள், நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி. பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ளதைப் போலவே காணப்படுகின்றன.

முன்னதாக, பி.கே.பி. விதித்த பகுதிகளில் மட்டுமே மாநில எல்லைகளைக் கடக்கும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பதிவைப் பொறுத்தவரை, மே 10-ஆம் தேதி நிலவரப்படி, பி.கே.பி. மற்றும் நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி. பகுதிகளுக்கு இடையேயான குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால், பி.கே.பி.பி. பகுதிகளில் செயல்பட அனுமதிக்கப்பட்ட வணிக தளங்களுக்குச் சற்று குறைவான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, பி.கே.பி. பகுதிகளில் சினிமாக்கள் இயங்க முடியாது.

காவல்துறை அனுமதியுடன் மட்டுமே மாநில மற்றும் மாநில எல்லை கடக்கும் பயணங்கள் அனுமதிக்கப்படும் என்று இஸ்மாயில் முன்பு கூறியிருந்தார்.

இருப்பினும், அதன் பின்னர், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் வேலை நோக்கங்களுக்காக மாநில எல்லைகளைக் கடக்க விரும்புபவர்கள் அந்தந்த நிறுவனங்களிலிருந்து ஒரு கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதனைத் தெளிவுபடுத்தினார்.

அதிகாரப்பூர்வ அல்லது சமூக நிகழ்ச்சிகளை நடத்த, அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு அனுமதி இல்லை என்றும் இஸ்மாயில் கூறினார்.

வழிகாட்டுதல்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மாவட்ட எல்லைகளைக் கடக்கும் பயணத் தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

இருப்பினும், கோல்ஃப் மைதானங்கள் உட்பட பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் பி.கே.பி. பகுதிகளில் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.