பி.என். அரசாங்கத்துடன் வசதிபடவில்லை என்றால் இராஜினாமா செய்யுங்கள் – ஹாடி அவாங்

அரசாங்கத்தை உருவாக்கியுள்ள கட்சிகளை ஆதரிக்காவிட்டாலும், ஆளும் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் விரும்புகிறார்.

அரசு ஊழியர்கள் தாங்கள் ஆதரிக்கும் கட்சி அல்லாத அரசாங்கத்துடன் வசதியாக இல்லாவிட்டால், தார்மீக ரீதியில் அவர்கள் இராஜினாமா செய்யலாம் என்று அவர் கூறினார்.

“விதிகளின்படி, அரசு அதிகாரிகள் ஆளும் கட்சியால் கட்டுப்படுத்தப்படும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும், அவர்கள் அரசாங்கமாக இருக்கும் கட்சியை ஆதரிக்காவிட்டாலும் கூட.

“… தார்மீக ரீதியாக, அவர்கள் இராஜினாமா செய்யலாம், அவர்கள் விரும்பியபடி ஒரு பதவியில் இருக்க முடியாது,” என்று அவர் நேற்று தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

“தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தில் இருக்கும் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) ஆதரவாளர்கள், திடீரென்று பி.எச். அறிவுறுத்தல்களைப் பின்பற்றுகிறார்கள், அது இப்போது அரசாங்கமல்ல எனினும்,” என்று அவர் கூறினார்.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில், பிஎச் மத்திய அரசை அமைப்பதில் வெற்றி பெற்றது. எவ்வாறாயினும், ஷெராட்டன் நடவடிக்கை மூலம், 2020-ஆம் ஆண்டில், டாக்டர் மகாதிர் மொஹமட் பெர்சத்துவை விட்டு வெளியேறியதை அடுத்து, அதன் தலைவர் முஹைதீன் யாசினும் பி.எச்.-ஐ விட்டு வெளியேற முடிவு செய்ததனால் அக்கூட்டணி சரிந்தது.

அந்த ஆண்டு மார்ச் மாதத்தில், தேசிய முன்னணி, பாஸ், ஜிபிஎஸ் மற்றும் சபாவைச் சேர்ந்த கட்சிகளுடன் இணைந்து, பெர்சத்து தேசியக் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது.

இருப்பினும், அரசாங்கத்தை அமைத்த பின்னர், ஒத்த கருத்து இல்லாததால், அம்னோவுக்கும் பெர்சத்துவுக்கும் இடையிலான உறவுகள் முறிந்தன.