குவான் எங் : எம்.கே.என்.-இல் இணைய எதிர்க்கட்சியை அழையுங்கள்

கோவிட் -19 தொற்றுநோயைக் கூட்டாகக் கட்டுப்படுத்த, தேசியப் பாதுகாப்பு மன்றத்தில் (எம்.கே.என்) எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் இணைக்குமாறு டிஏபி அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி. 3.0) மூன்றாவது சுற்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து வருவதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போரை, மக்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே வெல்ல முடியும் என்பதால் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்.

“மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, நாடாளுமன்றத்தை மீண்டும் திறக்க வேண்டும், கோவிட் -19 தொற்றுக்கு எதிராகப் போராட, தேசிய பாதுகாப்பு மன்றம் ஒரு சங்கத்தை உருவாக்க வேண்டும், அதில் எதிர்க்கட்சித் தலைவர்களையும் இணைக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

முஹைதீன் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவேண்டும் என்றும், பி.கே.பி. 3.0-ஐ மலேசியாவின் கடைசி பி.கே.பி.யாக ஆக்குவதற்கு, அனைத்து தரப்பினரையும் ஈடுபடுத்த வேண்டும் என்றும் குவான் எங் கூறினார்.

“கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் மூன்றாவது அலைக்கு எதிராக, பி.கே.பி. 3.0 வெற்றிபெறுவதை உறுதிப்படுத்த விரும்பினால், பிரதமர் முஹைதீன் யாசின் அனைத்து மலேசியர்களின் கருத்தையும் செவிமடுக்க வேண்டும், அவர்களுடன் ஈடுபட வேண்டும், பணியாற்ற வேண்டும்,” என்றார் அவர்.

பிரதமர், மூத்த அமைச்சர், தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் தலைமை இயக்குநர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர், அரசாங்கத் தலைமைச் செயலாளர், ஆயுதப்படையின் தளபதி மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் எம்.கே.என்.-இல் உள்ளனர்.

இதற்கிடையில், சாதாரண மக்களோடு ஒப்பிடுகையில், வி.ஐ.பி.களும் அமைச்சர்களும் தண்டனையின்றி தப்புவது அல்லது இலகுவான தண்டனை வழங்கப்படுவதும், அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குறைத்துள்ளது என்றார் லிம்.

“சமீபத்திய வழக்கில், மத்திய கிழக்கில் இருந்து திரும்பிய சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் அஸ்மின் அலி, 14 நாட்கள் தனிமைப்படுத்தல் எஸ்ஓபி நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை.

“மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற இது போன்ற இரு வர்க்கக் கொள்கைகள் நிறுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.