இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை இலவசத் தொலைபேசி அழைப்புகள்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இன்று இரவு 10 மணி தொடக்கம் நாளை காலை 10 மணி வரையில், நாட்டின் அனைத்து உள்ளூர் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் இலவச அழைப்புகளை வழங்கும் என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சைஃபுட்டின் அப்துல்லா தெரிவித்தார்.

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) மூலம் இயக்கப்படும் இந்த வசதியை, செல்கோம், டிஜி, மெக்சிஸ், ரெட்டோன், டி.எம். யுனிஃபை, டைம் டொட்கோம், டியூன் டாக், யூ மோபைல், யூடூ மற்றும் யெஸ் ஆகியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அனைத்து வாடிக்கையாளர்களும் அனுபவிக்கலாம்.

“ஒவ்வொரு சேவை வழங்குநரும் அந்தந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த இலவச அழைப்பு சலுகையை வழங்கும். வாடிக்கையாளர்கள் இந்தச் சேவை சலுகையின் எந்தவொரு கேள்விகளுக்கும் அந்தந்தச் சேவை வழங்குநர்களைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இன்று முதல் ஜூன் 7 வரை நடைமுறையில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.) கீழ், நோன்புப் பெருநாள் உபசரிப்புகள் அனுமதிக்கப்படாவிட்டாலும், மலேசியர்கள் தங்கள் அன்பானவர்கள் மற்றும் நண்பர்களுடனான உறவை இணைக்கவும் வலுப்படுத்தவும் இந்த வசதி உதவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

இதற்கிடையில், கோவிட் -19 நோய்த்தொற்றைத் தடுக்கும் பொருட்டு, பி.கே.பி.யுடன் இணங்க ஒத்துழைத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் மலேசியர்களுக்கும் சைஃபுடின் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

“இந்தத் தொற்றுநோயை அனைத்து தரப்பினரின் தியாகங்கள் மற்றும் முயற்சிகளால் சமாளிக்க முடியும் என்று நாம் அனைவரும் பிரார்த்திப்போம்,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா