பேய்ச்சி நாவல் குறித்த போலிஸ் புகார் சிறுபிள்ளத்தனமானது

பேய்ச்சி என்ற ம. நவீன் எழுதிய நாவல் கடந்த வருடம் (2020) அரசால் தடை செய்யப்பட்டது. அது ஒரு தரமான படைப்பாக இருந்தாலும் அதில் உள்ள சில பகுதிகளில் ஆபாசமான சொற்கள் இருப்பதால் அதைத் தடை செய்யக்கோரி புகார்கள் செய்யப்பட்டன.

குறிப்பிட்ட அந்த பகுதிகளை அகற்ற நாவலாசிரியர் மறுத்து விட்டார். கலையில் அடிப்படை அம்சம் சொல்வதல்ல; காட்டுவது. ஒன்றை நுணுக்கமாகக் காட்சிப்படுத்துவதே நாவலுக்குரிய கலைவடிவம். அதிலும் நாவலின் மைய முடிச்சாக இருக்கும் பாலியல் வல்லுறவு காட்சியை ஒற்றை வரியில் சொல்லிவிட்டு செல்வது படைப்புக்குச் செய்யும் துரோகம் என்கிறார் நவீன்.

எழுத்தாளர் கோ.புண்ணியவான் அவர்கள் கடந்த மார்ச் 22ஆம் திகதி வழங்கிய நேர்காணல் ஒன்றில் ‘2019ஆம் ஆண்டில் வெளியான நவீனின் பேய்ச்சி புதுவகைப் பாய்ச்சல் கொண்ட எழுத்து’ என தன் நேர்காணலில் கூறியுள்ளதைத் தொடர்ந்து  மதியழகன் முனியாண்டி என்பவர் போலிஸ் புகார் ஒன்றைக் கடந்த 21.4.2021-இல் செய்துள்ளார்.

அதில் தடை செய்யப்பட்ட நாவலை ஒட்டி ஒருவர்  பேசுவது பிழை எனும் அடிப்படையில் அவர் செய்துள்ளார். மேலும், ஆபாசமாக எழுதப்பட்ட ஒரு நாவலைப் புதுவகைப் பாய்ச்சல் கொண்ட எழுத்து எனக்குறிப்பிடுவது தவறான கருத்தாகும் என்பது அவரது புகாராகும்.

ம.நவீனுடைய ‘பேய்ச்சி’ நாவல் உள்துறை அமைச்சால் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட தடை உத்தரவு Printing Press and Publications Act 1984 S7(1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டது.  அதன்படி, பேய்ச்சி நாவலை எந்த வடிவத்திலும் விற்பது, இறக்குமதி செய்வது, மறுபதிப்பு செய்வது, நூலை விநியோகம் செய்வது போன்றவற்றிற்கே தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஒருவருடமாக இந்நாட்டில் புழக்கத்தில் இருந்த ஒரு நாவலை வாசித்த ஒருவர் அதன் இலக்கித் தரம் பற்றி கருத்துச் சொல்வதும், விமர்சனமாக பேசுவதும் குற்றம் என்ற வகையில் சட்டம் இல்லை.  மேலும் அது போன்ற விவாதங்களும் விமர்சனங்களும் இலக்கிய வளர்சிக்கு அடித்தளமாக அமையும்.

அதைவிடுத்து, குற்றவியல் அடிப்படையில் போலிஸ் புகார் செய்வது சிறுபிள்ளைத்தனமாகும்.