அறிமுகம்: சூரியா டீச்சர் – ஒரு பன்முக சாதனையாளர்

இராகவன் கருப்பையா –எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். ‘மாதா பிதா குரு தெய்வம்’ என பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் உள்ளனர் என்ற போதிலும், இறைவனுக்கு சமமாக போற்றப்பட வேண்டியவர்கள்தான் ஆசிரியர்கள்.

வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டுள்ள எல்லாருக்குமே ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் ஆசிரியர்கள் ஏணிப்படியாக இருந்திருப்பார்கள் என்றால் அது மிகையில்லை.

தங்களுடைய பார்வையின் கீழுள்ள அனைத்து மாணவர்களையும் வேற்றுமையின்றி துளியளவும் பிரதிபலன் எதிர்பாராமல் செம்மைபடுத்தும் ஆசிரியர்களின் சேவை அளப்பரியது.

இவ்வாராக நூற்றுக்கணக்கான தொழில் முனைவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் கணக்காளர்கள் போன்ற வெற்றியாளர்களை உருவாக்கியவர்தான் ‘சூரியா டீச்சர்’ என இன்றும் செல்லமாக அழைக்கப்படும் திருமதி சூரியா குமாரி சங்கரன்.

செகாமாட், ஜொகூரில் உள்ள நோத் லாபிஸ் தோட்டத்தில் திரு திருமதி குட்டி கிருஷ்ணன் நாயர் – கல்யாணி தம்பதிகளின் 10 பிளைகளில் 5ஆவது பிள்ளையாக கடந்த 1949ஆம் ஆண்டில் பிறந்தவர்தான் ‘சூரியா டீச்சர்’.

தோட்டத் தமிழ் பள்ளியில் தமது ஆரம்பக் கல்வியை தொடங்கிய அவர் செகாமாட் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை கல்வியை முடித்தார்.

தொடக்கத்தில் இருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய அவருடைய கனவு, இலட்சியம் எல்லாமே எப்படியாவது ஒரு ஆசிரியையாகிவிட வேண்டும் என்பதுதான்.

அதே வேட்கையில் பேராக், தஞ்சோங் மாலிமில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்த சூரியா குமாரி அங்கும் சிறந்த பட்டதாரியாக பயிற்சியை முடித்தார்.

பொதுப்பணி இலாகாவில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுநர் சங்கரன் மேனனை கடந்த 1969ஆம் ஆண்டில் கரம் பிடித்த அவர் சுமார் 10 ஆண்டுகள் ஜொகூரில் ஆசிரியையாக பணியாற்றிய பிறகு கோலாலம்பூருக்கு மாற்லானார்.

கூட்டரசுப் பிரதேச சிறந்த ஆசிரியர், மற்றும் கல்வி முகாமின் சிறப்பு தேர்ச்சி ஆசிரியர் போன்ற விருதுகளை பெற்றுள்ள சூரியா குமாரி தமது மகன் தீபக் குமாரன் மேனன் தயாரித்து இயக்கிய ‘செம்மன் சாலை’ எனும் உள்நாட்டுத் திரைப்படத்திற்கு கதை வசனத்தையும் கூட எழுதி சாதனை படைத்துள்ளார்.

தலைநகரில் 22 ஆண்டுகளும் சிலாங்கூர் மாநிலத்தில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்த அவர் கடந்த 2006ஆம் ஆண்டில் பதவி ஓய்வு பெறுவதற்கு முன் 3 ஆண்டுகள் சிறப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமது பணியைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி ஓய்வு பெறுவதற்கு முன் தலைநகர் கம்போங் பாண்டான் தமிழ்ப் பள்ளி, செராஸ் தமிழ்ப் பள்ளி, சிலாங்கூர் பண்டார் உத்தாமாவில் உள்ள எஃபிங்கம் தமிழ் பள்ளி, ஆகிய பள்ளிகளில் சிறப்ப தேர்ச்சி ஆசிரியையாகவும் தலைமை ஆசிரியையாகவும் பணியாற்றிய சூரியா குமாரி தமது 4 பிள்ளைகளின் மகத்தான வெற்றியிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.

மருத்துவர், பேராசிரியர், பொறியியலாளர், திரைப்படத் தயாரிப்பாளர், என வெவ்வேறுத் துறைகளில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என ‘சூரியா டீச்சர்’ பெருமிதம் கொள்கிறார்.

தற்போது பதவி ஓய்வு பெற்று வீட்டில் பேரக்குழந்தைகளுடன் பொழுதை கழித்து வரும் போதிலும் எண்ணிலடங்கா பழைய மாணவர்கள் இன்னமும் கூட தொடர்புகொண்டு பலதரப்பட்ட விசயங்களில் அவருடைய ஆலோசனைகளை நாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.