பெஞ்சானா கெர்ஜாய திட்டத்தில் ஊழல் என போலிஸ் புகார்!  “நடவடிக்கை எடுங்கள்” – குலசேகரன்

புதிய தொழிலாளர்களைச் சேர்ப்பதற்கான பெஞ்சானா கெர்ஜாய என்ற ஊக்கத் தொகை திட்டம் அதன் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும், அதில் முறைகேடுகள் இருப்பதாகவும் அவை உடனடியாக சீர் செய்யப்பட வேண்டும் என்கிறார் முன்னாள் மனித வள அமைச்சர் மு.குலசேகரன்.

பொருளாதாரத்தை  மேம்படுத்துவதற்காகவும் அதிகமான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே இந்த பெஞ்சானா கெர்ஜாய  திட்டமாகும்.

கோவிட் 19 தொற்றின் காரணமாகப் பலர் வேலை இல்லாமல் தவிக்கும்  இத்தருணத்தில்  மனித வள அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்டு சொக்சோவால் நிர்வகிக்கப்படும் இந்த திட்டம்  அதன் இலக்கை அடைவதற்கு முன்னாலே தடம் புரண்டுவிட்டதாகத் தெரிகிறது என்கிறார் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலா.

“முதலாளி மார்களுக்கு ஊக்கத் தொகை கொடுப்பதன் மூலம் வேலை இல்லாதவர்கள்  இந்த முதலாளி மார்களிடம் வேலை செய்ய மனுசெய்யலாம்.  வேலையில் சேர்க்கப்படும்  தொழிலாளர்களுக்கேற்ப முதலாளிகளுக்கு ஊக்கத்தொகை (குறைந்த பட்சம் சம்பளத்தில் 40%) சொக்சோவால் வழங்கப்படுகிறது.”

உன்னத நோக்கத்தைக் கொண்ட இந்த திட்டத்தை சில முதலாளி  மார்கள் தவறாகப் பயன்படுத்துவதாக தெரிகிறது என்று சாடும் குலா, “இந்த பெஞ்சான கெர்ஜாய  திட்டத்திற்கு மனு செய்து  அனுமதி பெற்றவுடன் ,ஏற்கனவே தங்களிடம் தயாராக உள்ள பட்டியலிலிருந்து பெயர்களை  எடுத்து சொக்சோவிற்கு அனுப்பிவிட்டு, தொழிலாளர்களை வேலைக்கமர்த்திவிட்டது போல் ஒரு மாயையை ஏற்படுத்தி   ஊக்கத் தொகையை முதலாளி மார்கள்  பெற்றுக்கொண்டுவிடுகின்றார்கள்” என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

“ஆனால் உண்மையில் இவர்கள்  யாரையும் வேலைக்குச் சேர்த்துக் கொள்வதில்லை” என்கிறார்.

அது போன்ற பெயர்ப் பட்டியல் இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது  என்பது பெரிய கேள்விக் குறியாக உள்ளது. ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரின் தனிப்பட்ட தகவல்களை மற்றவர்கள் பயன்படுத்துவது, 2010 தனி நபர் தகவல் சட்டத்தின்படி  குற்றமாகும் எனச் சாடுகிறார் குலா.

குற்றச்சாட்டுகளுக்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா என்ற கேள்விக்கு விடையளிக்கையில்,

“இதன் தொடர்பில், காராக் சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு காமாட்சி அவர்கள் போலீஸ் புகார் ஒன்றினை செய்துள்ளார். அவர் வட்டாரத்தில்  உள்ள சில இளைஞர்களின் பெயர்கள் சொக்சோவில் சந்தா  செலுத்தும் உறுப்பினர்களாகப்  பதிவு செய்யப்படுள்ளதாகவும், சினர்ஜி  கம்யுனிகேஷன்ஸ் ஓன் டெக்னாலஜி (Synergy Communication on Technology Sdn Bhd.) என்ற நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் தகவல் கிடைத்ததின் பேரில் இந்த புகார்  செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் அந்த குறிப்பிட்ட இளைஞர்கள் வேலை செய்யவில்லை என்பதுதான் உண்மை.” என்கிறார்.

அந்நிறுவனம் பெஞ்சான திட்டத்தில் ஊக்கத்தொகை  பெறுவதற்கு மனு செய்துள்ளது என்பது குறிப்பிட தக்கதாகும்.

“வேலை இல்லாமல் கஷ்டப்படுவோருக்கென  ஒதுக்கப்பட்டிருக்கும் இந்த நிதி முறையான கண்காணிப்பு ,  வெளிப்படைத் தன்மை இல்லாததால்  விரயமாகுவது எந்த வகையில் நியாயமாகும்?” என வினவுகிறார் இந்த ஐந்து முறைகள் நாடாளுமன்ற தேர்தல்களில் வென்ற மூத்த அரசியல்வாதி.

“இந்த தவறான நடவடிக்கைகளால்  புதிதாக வேலைக்குச் சேர   தயாராக இருக்கும் அப்பாவி இளைஞர்கள் சொக்சோவினால் நடத்தப்படும் எந்த ஒரு பயிற்சியிலும் கலந்து கொள்ள முடியாத  சூழலில் தள்ளப்படுகிறார்கள்.”

“காரணம் இவர்கள் ஏற்கனவே வேலை செய்துகொண்டிருப்பதாக சொக்சோவின்  பதிவில் உள்ளதால் , இவர்களுக்கு இந்த புதிய பயிற்சி வாய்ப்புகள்  கிடைக்கப்போவதில்லை. புதிய வேலை கிடைக்க முடியாமலும், அதற்காக அவர்களைத் தயார்ப் படுத்த எந்த ஒரு பயிற்சியிலும் கலந்துகொள்ளமுடியாதபடி அவர்களின்   தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதால் இந்த இளைஞர்களின்  எதிர்காலம் கேள்விக்குறியாக ஆகும் நிலை உள்ளது  என்பது அரசாங்கத்தின்  கவனத்திற்குரியது” என்கிறார்.

நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தும்  அது அடைய  வேண்டிய இலக்கை அடையவில்லை என்பதை மனித வள அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட குலா, “மக்கள் வரிப்பணம் விரயமாகாமல் இருக்கவும், வேலை இல்லாதோருக்கு வாய்ப்பளிக்கவும், இதனால் ஒரு சிலர் சுய லாபம் அடையாமல் இருக்கவும் அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்.