தோழர் சின்னப்பன் ஓர் அறிவுக்களஞ்சியம் – எஸ் அருட்செல்வன்

சகோதரர் போல் சின்னப்பனின் மரணம் பற்றி கேள்விபட்டபோது, ​​”வெள்ளைக்காரன் ஆட்சியிலே, இரப்பர் மரத் தோட்டத்திலே, கூலியாக வந்தவனே, உன் நிலைமை என்ன, அடிமை வாழ்க்கை வாழாதே, நீயும் சேர்ந்து போராடு” , எனத் தோட்டத் தொழிலாளியின் தலைவிதியையும் ஒடுக்கப்பட்ட வாழ்க்கையையும் பற்றி அவர் பாடியப் பாடல்வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

இந்தப் பாடலைச் சின்னப்பன் அறிமுகப்படுத்தினார். தோட்டத்தில் வாழ்ந்துவந்த தோட்டப் பாட்டாளிகளின் குழந்தைகளுக்கு, இப்பாடலை நாங்கள் கற்பித்துள்ளோம். நாயகன் திரைப்படத்தின் பாடல் மெட்டில், இசைக்கப்பட்ட பாடல் இது.

இந்தப் பாடலைப் போலவே, ஓர் ஆசிரியராக, பயிற்சியாளராக, ஓர் ஆர்வலராக, தனது பேச்சுக்கள், உரைகள், நாடகங்கள் மற்றும் எழுத்துகளின் வழி சேவையாற்றி, பலரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் சின்னப்பன் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு முழு தொகுப்பு, ஓர் அறிவுக்களஞ்சியம்.

எனது சமூகச் செயல்பாடுகளில் பலரின் தாக்கம் இருக்கும்.

என்னுடன் இருந்த நசீர் மற்றும் செல்வம் போராட்ட அரசியல் பற்றி எனக்குக் கற்பித்தனர். மற்றொரு பெரிய தாக்கம் எனக்கு அடிமட்ட வேலைகள், கூட்டு முறையில் அனைவரின் பங்களிப்போடும் முடிவெடுப்பது மற்றும் பல்வேறு கலைகளின் பயன்பாடு ஆகியவற்றில் இருந்து வந்தது. ஒரு மாணவராக என்னைப் பாவித்து, நாம் கட்டியெழுப்ப வேண்டியச் சமுதாயத்தை எனக்குக் கற்பித்த பலர் இருந்தனர்.

அவர்களில் ராணி, சரஸ், டாக்டர் குமார், ஆறுமுகம் போன்றவர்களும் இருந்தனர். சின்னப்பனைப் பற்றி ராணி இப்படிக் கூறுகிறார் :-

“சமூக அமைப்பாளர்களுக்கு ஓர் “அத்தியாவசிய வாசிப்பு” போன்றவர் சின்னப்பன், குறிப்பாக 80-களில், ​​இப்போது போலல்லாமல், சமூகச் செயல்பாட்டு நிலப்பரப்பு முடக்கப்பட்டு, சமூக இயக்கங்களும் போராட்ட நடவடிக்கைகளும் தரிசாக இருந்தபோது, ஆர்வமுள்ள சமூக ஆர்வலர்களுக்கு அவர் ஒரு விடிவெள்ளி.

“சின்னப்பன் எங்களைப் போன்ற புதியவர்களுக்கு ‘ஒருங்கிணைக்கும்’ ஓர் உலகத்தைத் திறந்துவிட்டார், தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் – தலைவர் அல்ல – மற்றும் பணிவு, நாங்கள் ஒருங்கிணைக்கும் மக்கள் மீதான மரியாதை போன்ற தலைமைத்துவப் பண்புகளைக் கற்பித்தார். ஒடுக்கப்பட்ட மக்களை எவ்வாறு இயக்குவது, அவர்களை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றியும் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

“அவர் எங்களுக்கு ப்ளூ-தேக், மாஜோங் பேப்பர் மற்றும் குழு இயக்கவியல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார், வேடிக்கையாக இருந்த அந்தப் பயிற்சிகள், வறுமை கலாச்சாரத்திற்கு ஒரு மாற்றீட்டை ஊக்குவிப்பதாக இருந்தன. அவருடைய மனிதாபிமானத்திலிருந்து நாங்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டோம். அவர் பாலினச் சமத்துவத்தைப் பற்றி அமர்வுகளில் மட்டும் பேசவில்லை, வீட்டிலும் அதைக் கடைப்பிடித்தார்.

“பயிற்சிகளின் போது, சாதி போன்று நாம் வளர்ந்த புராணங்களை அவர் அடித்து நொறுக்கினார், அதற்கு வரலாற்று முன்னோக்கைக் கொடுத்தார், மேலும் ஆளும் வர்க்கங்கள் மதத்தையும் வெகுஜன ஊடகங்களையும் எவ்வாறு அத்தகைய நம்பிக்கைகளை நிலைநாட்ட பயன்படுத்தின என்பதையும் சுட்டிக்காட்டினார்.”

அவருடனும் மற்ற தோழர்களுடனும் நான் கொண்டிருந்த தொடர்புகளின் மூலம், நான் பல விஷயங்களைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். மதத்தில் இருந்த முற்போக்குக் கூறுகள், விடுதலை இறையியல், முன்னோக்குகளை உருவாக்குவதில் கலை மற்றும் கலாச்சாரத்தின் முக்கியத்துவம்; பாலின முன்னோக்குகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுடன் எவ்வாறு பணிபுரிவது எனப் பலவற்றை நான் புரிந்துகொண்டேன். சின்னப்பன் எப்போதுமே வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய தனது பகுப்பாய்வில் உறுதியாக இருப்பவர், எங்கள் பாதைகள் அப்படித்தான் ஒன்றோடொன்று இணைந்தன என்று நான் நினைக்கிறேன்.

காஜாங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், நாங்கள் ‘மக்கள் பொங்கல்’ ஏற்பாடு செய்ய அவரும் அவரது கருத்துகளும்தான் காரணம். தோட்டத் தொழிலாளர்களுடன் சேர்ந்து பொங்கல் வைப்பது குறித்த அவரது யோசனைகளை நாங்கள் கடைபிடிக்கத் தொடங்கினோம், அதை எங்கள் ஆண்டு நிகழ்ச்சியாகவே செய்தோம்.

சின்னப்பன் திறமைமிக்க ஒரு செயற்பாட்டாளர். அவர் ஒரு மிகச்சிறந்த, அறிவார்ந்த பயிற்சியாளராகவும் இருந்தார். உண்மைகள் மற்றும் உறுதியான வாதங்களுடன், நீங்கள் சற்றும் சலிப்படையா வண்ணம், அவரால் ஓர் அமர்வை செய்ய முடியும். அவரால் பாட முடியும், எடுத்துக்காட்டுகள் கொடுக்க முடியும், அன்றையப் பயிற்சி தொடர்பான பல கதைகளைச் சொல்ல முடியும், அவற்றில் பெரும்பாலானவை அவரது சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவர் நிறைய பயணங்கள் மேற்கொள்வார், அந்த அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டார். அவரிடம் பகிர்ந்துகொள்ள எப்போதும் ஏதாவது இருந்தது.

அவர் மிகவும் இனிமையானவர், எப்போதும் அமைதியாகக் காணப்படுவார். ஒரு விவாதம் என்றால், அதற்காக நேரம் இல்லை என்று ஒருபோதும் சொல்லமாட்டார், நிறையக் கதைகளுடன் எப்போதும் தயாராக இருப்பார்.

சிறு கடன், சிறு தொழில் மற்றும் கூட்டுறவுக் கழகங்களில் சிறந்த ஆலோசகராக இருந்தவர், தோட்டத் தொழிலாளர் பிரச்சனைகளில் நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவரது சமூக அடிப்படையிலான கூட்டுறவு நிறுவனங்கள், சுமார் 64,000 குடும்பங்களுக்கு வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பிரச்சினைகளில் உதவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரும் பங்களிப்பு.

மக்கள் சேவை இயக்கம் (People Service Organisation -பி.எஸ்.ஓ.) என்ற ஓர் அமைப்பையும் அவர் தொடங்கினார், இது கோல சிலாங்கூரில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்கப் பல பணிகளை ஆற்றியது. இவ்வியக்கம் மழலையர் பள்ளிகளை நடத்தியதோடு, சிறந்த வேலை நிலைமைகாகவும் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சிறந்த ஊதியங்களுக்காகவும் போராடியது.

பி.எஸ்.ஓ. தோட்டத் தொழிலாளர் ஆதரவு குழுவின் (ஜே.எஸ்.எம்.எல்) ஒரு பகுதியாக இருந்தது, அங்கு நாங்கள் மாத ஊதியப் போராட்டம், அரசாங்கத்தின் கிராம அபிவிருத்தி திட்டத்தில் தோட்டங்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுவசதி போன்ற பல போராட்டங்களை மேற்கொண்டோம்.

ஜலால், இராயப்பன், சுசி, மறைந்த கிருஷ்ணன், இராஜசேகரன், ஆறுமுகம், பிரான்சிஸ் போன்ற பல ஆர்வலர்களைக் கொண்ட ஓர் ஒருங்கிணைப்புக் குழுவை அவர் உருவாக்கினார்.

ஒருநாள், ஒரு பயிற்சியின் போது, அவர் பழையச் செய்தித்தாள்களைப் பயன்படுத்தி, நமது எண்ணங்களை வெளிபடுத்தும்படி கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது அவருடன் ஒரு சிறுவன் இருந்தான், அந்தச் சிறுவன் ஓர் எண்ணெய் பனை மரத்தை வரைந்து கொண்டிருந்தான். அச்சிறுவன் தனது இளைய மகன் என்று அவர் எங்களிடம் கூறினார். அந்தச் சிறுவன்தான், நமக்கெல்லாம் அறிமுகமான அருள் பிரகாஷ், கோமாஸ் மற்றும் பெர்சே ஆர்வலர்.

அவரது மகன் அருள், தனது முகநூலில் இப்படி பதிவிட்டுள்ளார் : “நான் ஏழைகளுக்காக, ஓரங்கட்டப்பட்டவர்களுக்காகப் பணியாற்றவும், அடக்குமுறைக்கு எதிராகப் போராடவும் எனக்கு உத்வேகமாக அமைந்தது அவர்தான். அவர் பலரையும் ஊக்கப்படுத்தியுள்ளார் என்று நான் நம்புகிறேன். அப்பா, நிம்மதியாக ஓய்வெடுங்கள். உங்கள் போராட்டத்தை நான் தொடருவேன்.”

ஆமாம், சின்னப்பன் பலரிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார், பலரை ஊக்கப்படுத்தியுள்ளார், மேலும் பல ஆர்வலர்களை உருவாக்க பெரும் பங்காற்றியுள்ளார். அவரது மனைவி பாப்பாத்தி, இரட்டைச் சகோதரர் இராயப்பன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்.

பி.எஸ்.எம். ஒரு நல்ல தோழரை, சமூக அமைப்பாளரை மற்றும் ஒரு சிறந்த திறன்மிக்கவரை இழந்துள்ளது.

அமைதியாக ஓய்வெடுங்கள் தோழரே!

___________________________________________________________________________________

எஸ் அருட்செல்வன், துணைத் தலைவர், மலேசிய சோசலிசக் கட்சி