வானில் தோன்றிய ‛பிளட் மூன்’; நியூசிலாந்து, ஆஸி., உள்ளிட்ட நாட்டு மக்கள் கண்டு ரசிப்பு

வெலிங்டன்: இந்த ஆண்டின், முதல் சந்திர கிரகணமான நேற்று, வானில் தோன்றிய, ‘சூப்பர் மூன் மற்றும் பிளட் மூன்’ எனப்படும் ரத்த நிலாவை, நியூசிலாந்து மக்கள் கண்டு ரசித்தனர். சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் பூமி வரும் போது, சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால், சூரிய ஒளி நிலவில் படுவதை பூமி மறைத்து விடுகிறது.

பூமியின் நிழல் தான், நிலவில் படுகிறது. பூமி — நிலவு இடையேயான சராசரி தொலைவானது, 3.84 லட்சம் கி.மீ.,யை விட குறைவாக இருக்கும் போது, ‘சூப்பர் மூன்’ தோன்றுகிறது. அப்போது, சாதாரணமாக தெரியும் நிலவை விட, 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும், நிலவு தெரியும்.சூரியனை ஒரு முறை பூமி சுற்றி வர, 365.26 நாளாகிறது.

நிலவு ஒரு முறை பூமியைச் சுற்ற, 29.32 நாளாகும். இக்கணக்கீட்டு முறையில் பூமியின் ஒரு பக்கம் சூரியனும், மறுபக்கம் நிலவும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூப்பர் மூன் தோன்றுகிறது.சூப்பர் மூன் ஏற்படும் போது, பூமிக்கு அருகில் நிலவு வருவதால், சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுகிறது. இதனால், அலை நீளமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டு பிரதிபலிக்கும். அதனால், ‘ஆரஞ்சு’ முதல் ரத்த சிவப்பு நிறத்தில் நிலா தெரியும். இது, ‘ரத்த நிலா’ எனப்படுகிறது.

இந்த அரிய நிகழ்வு, நியூசிலாந்து நாட்டில் நேற்று தெரிந்தது. மொத்தம், 15 நிமிடங்கள் தெரிந்த இந்த கண்கொள்ளா காட்சியை மக்கள் கண்டு ரசித்தனர்.நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில், நேற்று நள்ளிரவு இந்த ரத்த நிலாவை மக்கள் கண்டு ரசித்தனர். வட அமெரிக்காவின் சில பகுதிகளில் மட்டும் அதிகாலை இக்காட்சியை காண முடிந்தது. ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளை சேர்ந்த மக்களுக்கு, இந்த அரிய காட்சியை நேரடியாக காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

dinamalar