வியட்நாமில் உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு – காற்றில் வேகமாக பரவும் தன்மையைக் கொண்டது

வியட்நாமில் உருமாறிய கொரோனா வைரஸ் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இது காற்றில் அதிவேகமாக பரவும் தன்மையைக் கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வியட்நாமில் உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு – காற்றில் வேகமாக பரவும் தன்மையைக் கொண்டது

ஹனோய்: கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது 200 உலக நாடுகளில் பரவிவிட்ட இந்த வைரஸ் உருமாறி வருகிறது.

உருமாறிய வைரஸ் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்தநிலையில் வியட்நாம் நாட்டில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக வீரியமிக்கது. இது காற்றிலும் பரவும் தன்மையைக் கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதுபற்றி அந்த நாட்டின் சுகாதார மந்திரி நகுயென் தன் லாங் கூறியதாவது:-

புதிய உருமாறிய வைரஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளோம். இது அதிக வீரியமிக்க வைரசாகும். இது இந்தியாவிலும், இங்கிலாந்திலும் முதலில் காணப்பட்ட உருமாறிய வைரஸ்களின் கலப்பினம் ஆகும்.

இந்த வைரசின் தனித்தன்மை என்னவென்றால், இது காற்றில் வேகமாக பரவக்கூடியதாகும். தொண்டை திரவத்தில் இந்த வைரசின் செறிவு வேகமாக அதிகரிக்கிறது. சுற்றுச்சூழலிலும் வலுவாக பரவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் இந்த வைரஸ் பாதிப்பு அங்கு எத்தனை பேருக்கு உள்ளது என்பது குறித்து அவர் வாய்திறக்கவில்லை.

அதே நேரத்தில் வியட்நாம் மத்திய சுகாதாரம் மற்றும் தொற்றுநோயியல் நிறுவனம் இதையொட்டி கூறுகையில், “எங்கள் விஞ்ஞானிகள் 32 நோயாளிகளில் 4 பேரில் மரபணு மாற்றம் கொண்ட வைரஸ்களை மரபணு வரிசை முறை மூலம் கண்டறிந்துள்ளனர்” என கூறியது.

இதற்கு முன்பாக வியட்நாமில் 7 கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக வியட்நாம் சுகாதார அமைச்சகம் கூறியது.

maalaimalar