தடுப்புக் காவலில் இன்னொரு மரணமா?  எப்பொழுது ஓயும் இந்த மரண ஓலங்கள் – குலசேகரன்

 

“கிள்ளான் போலீஸ் தடுப்பு காவலில்    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உமார் பாருக் அப்துல்லா  ஹெமநாதன் என்ற  இன்னுமொருவரின் அதிர்ச்சி மரணம் என்ற செய்தி நம்மை அதிரவைக்கிறது.”

“இன்னும் எத்தனைக் காலங்களுக்கு இந்த காவல்துறையினரின் அடாவடி செயல்களை   நாம் பொறுத்துக் கொள்ளவேண்டும்.”

“நாம் ஏமாளிகள், பலவீனமானவர்கள், கொட்டக் கொட்ட குனியக் கூடியவர்கள் என்பதாலா நமக்கு  இந்த தொடர் அவலம் ?”

“வெறும் 15 நாட்களில் காவல் துறை கண்காணிப்பில் 3 மரணங்களா?”

“கோவிட் 19 நச்சுக் கிருமி தான் கொள்ளை நோய் என்றால் ,காவல் துறையில் ஏற்படும் மரணங்களும் ஒரு வகை கொள்ளை நோய் என்று வகைப்படுத்தலாமா? அதுவும் இனம் பார்த்துத் தாக்கும் இந்த மரணங்கள் மலேசியாவிற்கே உரித்தான தனித்தன்மை வாய்ந்த ஒரு கொள்ளை நோய் என்றால் அது மிகையாகாது.

இதற்கு முன்பு சிவபாலன் என்பவர் மே  மாதம்  20 அன்று கொம்பாக் காவல் நிலையத்தில் மரணமடைந்தார் , அதே காவல் நிலையத்தில் கணபதியும் தடுத்துவைக்கப்பட்டு பின்பு மருத்துவமனையில் இறந்தார் . அவரைத்தொடர்ந்து சுரேந்திரன் சங்கர்  என்பவர் சிம்பாங் ரெங்கம் சிறைச்சாலையில் மரணமுற்றார். ஆக 15 நாட்களில் இறந்த மூவரோடு இந்த உமார் பாருக் அப்துல்லாவும் சேர்ந்து நான்கு இந்திய வம்சாவளியினர் தொடர்ந்தார் போலக் காவல் துறை கண்காணிப்பில் இருக்கும் போது இறந்துள்ளனர்.

இதற்கு முன்பும் அதிகமான இந்தியர்கள் காவல் துறையின் கண்காணிப்பில் இருக்கும் போதே இறந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இதனை தட்டிக் கேட்க இந்த பெரிக்காதான் அரசிடம் இந்தியப் பிரதிநிதிகள் யாரும் இல்லையா?

மலேசிய நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் எப்பொழுது இந்த மரண ஓலங்கள் ஓயப்போகின்றன?

இதற்கு காவல் துறை தலைமை ஆணையர்  எப்பொழுது வாய்திறந்து பதிலளிக்கப் போகிறார் ?

புதிய காவல்துறை ஆணையர் பதவி ஏற்றவுடன் காவல்துறை கண்காணிப்பில் இனிமேல் மரணம் என்பது பூஜ்ஜியம் என்ற இலக்கில்தான்  இருக்க வேண்டுமென்று நான் ஏற்கனவே  கேட்டு கொண்டேன். ஆனால் நடப்பதோ நேர்மாறாக இருக்கிறது.

இதற்கு உரிய  நடவடிக்கைகளை அரசு  எடுக்க தவறுமேயானால் , ஏற்கனவே  காவல் துறையின் மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையை  இது  மேலும்  மோசமாக்கும் என்பது திண்ணம் .

காவல் துறையினரால்  கைது செய்யப்படும் அனைவரும் விசாரணைக்குப் பின் உயிரோடு திரும்புவார்கள்  என எதிர்பார்ப்பதுதான்  மக்களின் இயல்பு. ஆனால் இப்பொழுது அந்த இயல்பு மாறி மரணம் நிச்சயம் என்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதற்குக் காவல் துறையே.

பெரிக்காத்தான் அரசின் அமைச்சரவை எப்பொழுது வருமுன் காப்போம் என்னும் ரீதியில் இதற்கு முழுமையான  நடவடிக்கை எடுக்கப்போகிறது ? பிரதமர் மொகைதின் எப்பொழுது அவரின் மௌன விரதத்திலிருந்து விழிக்கப்போகிறார் ?

காவல் துறையும் மற்ற அரசு கேந்திரங்களும் இந்த காவல் துறை மரணங்கள் தொடர்பில் முழு விசாரணை நடத்த வேண்டும் என உள்துறை அமைச்சு    விடுத்திருக்கும்  அறைகூவலுக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன் . அதே வேளையில் இது முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டுமென கேட்டு கொள்கிறேன் .

காவல் துறையில் ஏற்படும் மரணங்களுக்கு முழு  அரசு ஆணை அமைக்கப் பெற்று தீவிர  விசாரணை நடத்தி இது போன்ற  மரணங்கள் இனிமேலும் நிகழா வண்ணம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட  வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

கணபதி மரணம் ஏற்பட்டுப் பல நாட்கள் ஆகியும் இன்றுவரை அது குறித்து நடத்தப்பட்டதாக கூறப்படும் விசாரணையின் முடிவுகள் ஒன்றும் வெளிவரவில்லை .

ஏனிந்த மௌனம் ? காலம் கடந்த நீதி, மறுக்கப்பட்ட நீதி !”

(மு.குலசேகரன், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பிணர், தேசிய உதவித் தலைவர் ஜனநாயக செயல் கட்சி, முன்னாள் மனித வள அமைச்சர்)