இந்தியாவுக்கு அமெரிக்கா தடுப்பூசி அனுப்புகிறது – ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எம்.பி.க்கள் பாராட்டு

ஜோ பைடன்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா 2.5 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைத்து உதவ முன்வந்துள்ளது.

இந்தியாவுக்கு அமெரிக்கா தடுப்பூசி அனுப்புகிறது – ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எம்.பி.க்கள் பாராட்டு

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்றளவிலும் போராடி வருகின்றன. பல நாடுகள் தடுப்பூசிக்கு தவித்து வருகின்றன.

இந்தநிலையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா 2.5 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைத்து உதவ முன்வந்துள்ளது.

இன்றைய தருணத்தில் இது மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளது.

இந்த உதவியை செய்வதற்கு முன்வந்துள்ள ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு அமெரிக்க எம்.பி.க்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செனட் சபை எம்.பி. ஜான் கார்னின் கூறுகையில், “கொரோனா தடுப்பூசிகளை மிகவும் தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஜோ பைடன் நிர்வாகத்தின் உறுதியை நான் பாராட்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய ஆபத்தான எழுச்சிக்கு, அவர்கள் பதில் அளிக்கிற வகையில் உதவுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் அவர் கூறி உள்ளார்.

மற்றொரு செனட் சபை எம்.பி.யான ஹைட் சுமித், “கொரோனாவுக்கு எதிராக இந்தியா போராடுகிறது. இந்த நேரத்தில் தனது கூடுதல் தடுப்பூசிகளை நட்பு நாடான இந்தியாவுக்கு கொடுத்து உதவுவது முக்கியமானது. இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, இந்த கொடிய தொற்றுநோய்க்கு முடிவு கட்டுவதற்கு உலகளாவிய ஒத்துழைப்பு தேவைப்படும்” எனகூறி உள்ளார்.

இதே போன்று பிரதிநிதிகள் சபை பெண் எம்.பி. ஷீலா ஜேக்சன் லீ கூறுகையில், “ இந்தியா நமது நெருங்கிய நண்பர். மூலோபாய கூட்டாளி. கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் அமெரிக்கா பாதிப்புக்குள்ளானபோது இந்தியா உதவியது. இப்போது இந்தியா பாதித்துள்ள நிலையில், அவர்களுக்கு ஜோ பைடன் நிர்வாகம் உடனடியாக உபரி தடுப்பூசிகள் மற்றும் நிவாரண பொருட்களை அனுப்புவதற்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

பிரதிநிதிகள் சபையின் மற்றொரு எம்.பி.யான பிரையன் பிட்ஸ்பாட்ரிக், இந்தியாவில் கொரோனா தொற்றை சமாளிக்க அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு ஜோ பைடன் நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

maalaimalar