தடுப்பூசிகள் போட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் நிகழாது: எய்ம்ஸ் தகவல்

தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மரணமும் ஏற்படவில்லை என்று எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதுடெல்லி, இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியாவில் 3 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் நாடெங்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மிகவும் குறைவான இடங்களில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இவை அனைத்திலும் இரு டோஸ்கள் தடுப்பூசிகளை போதிய இடைவெளியில் அவசியம் போட வேண்டும். அதே வேளையில் ஒரு டோஸ் அல்லது இரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைவதாகத் தகவல்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர்.

இதுதொடர்பாக எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ஆய்வில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா வந்த 36 நோயாளிகளும், ஒரு டோஸ் போட்டு தொற்று பாதிப்புக்குள்ளான 27 பேரும் என 63 பேர் உட்படுத்தப்பட்டனர். இதில் 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் மீதம் உள்ளோர் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஆவார்கள். கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் பரிசோதனையின் போது வைரஸ் அளவு அதிகமாகவும் காய்ச்சலும் இருந்தது. காய்ச்சல் 5 முதல் 7 நாட்கள் வரை இருந்தது. தடுப்பூசி போடாமல் கொரோனா பாதித்தவர்களைப் போன்றே இது இருந்தது.

பாதிப்படைந்தோர் உடலில் தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருந்தாலும், தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மற்ற நோயாளிகளைப்போலவே மருத்துவமனையில் சேர்க்கும் நிலை ஏற்பட்டாலும் யாருக்கும் மரணம் நிகழவில்லை” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

dailythanthi