ஏமனில் பயங்கரம்: ராணுவ தலைமையகம் மீது ஏவுகணை வீச்சு – 5 வயது குழந்தை உள்பட 17 பேர் சாவு

ஏமனில் ராணுவ தலைமையகம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீசியதில் 5 வயது குழந்தை உள்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.‌

ஏடன், ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சி படைக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.இந்த போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல லட்சம் மக்கள் வாழ்வாதாரம் தேடி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இதனால் ஏமனை மிகவும் மோசமான மனிதாபிமான பேரழிவு நாடாக ஐ.நா. வரையறுக்கிறது. இந்த நிலையில் ஏமனின் வடகிழக்கு பகுதியில் மரிப் மாகாணத்தின் தலைநகர் மரிப் நகரில் அமைந்துள்ள ராணுவ தலைமையகத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை ஒன்றை வீசினர். இந்த ஏவுகணை ராணுவ தலைமையகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் மையத்தில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் என மொத்தம் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.‌ இதில் 5 வயது பச்சிளம் குழந்தையும் அடங்கும்.

மேலும் 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

dailythanthi