சைபர்ஜெயாவில் நடந்த சோதனையில் 156 வெளிநாட்டினர் கைது

சைபர்ஜெயாவில், ஒரு சட்டவிரோதக் குடியிருப்பில் நடந்த சோதனை நடவடிக்கையில், 156 வெளிநாட்டினரைக் குடிநுழைவுத் துறை நேற்று இரவு தடுத்து வைத்தது.

இரவு 11 மணிக்கு நடந்த அந்த நடவடிக்கையில், 12 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட இந்தோனேசியா, வங்களாதேசம், பாகிஸ்தான், மியான்மர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து குடியேறிய, நான்கு முதல் 50 வயது வரையிலான, 202 பேரிடம் சோதனை செய்யப்பட்டதாக அதன் தலைமை இயக்குநர் கைருல் டிசைமி டாவுட் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடம் செல்லுபடியாகும் பயண மற்றும் அடையாள ஆவணங்கள் இல்லை என்று கைருல் கூறினார்.

மூன்று மாதகால உளவுத்துறையின் கண்காணிப்புக்குப் பின்னர், திருடப்பட்ட மின்சாரம் மற்றும் நீர் பொருத்தப்பட்ட அந்தச் சட்டவிரோதக் குடியேற்றங்கள் மீதான சோதனை, போலிஸ், மலேசிய சிவில் பாதுகாப்பு படை, தேசியப் பதிவுத் துறை மற்றும் மனிதவளத் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது என அவர் மேலும் சொன்னார்.

“இந்தக் குடியிருப்பு கோவிட் -19 பரவலின் ஆதாரமாக இருக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் பி.கே.பி.-இன் எஸ்.ஓ.பி.-க்கான சமூக இடைவெளி போன்றவற்றுக்கு அது இணங்கவில்லை,” என்று கைருல் கூறினார்.

தொடர்பு கொண்டபோது, ​​வடக்கு-தெற்கு முன்முயற்சி மனித உரிமைகள் குழுவின் இயக்குநர் அட்ரியன் பெரேரா, இந்தத் திடீர் சோதனை, கள்ளக் குடியேறிகளைத் தடுத்து நிறுத்துவதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று வலியுறுத்தினார்.

“தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் ஒவ்வொரும் ஆவணமற்றவர்களாக இருப்பதற்குக் காரணமான குற்றவாளிகளின் சங்கிலி தொடர் ஒன்று உள்ளது.

“இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில், குடிநுழைவுத் துறை தீவிரமாக இருந்தால், சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளை வேட்டையாட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இந்தச் சோதனையின் பெர்னாமா டிவி காட்சிகள் குறித்து கூறுகையில், சில அதிகாரிகள் வெளிநாட்டினரைத் துரத்திச் சென்றனர், பின்னர் தடுத்து வைக்கப்பட்டவர்கள் மீது தெரியாத ஒரு பொருளைத் தெளிப்பதைக் காணலாம் என்றார் பெரேரா.

மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, ​​கேள்விக்குரிய அந்தப் பொருள் கிருமிநாசினி என்று கைருல் டிசைமி கூறினார்.

“அது டெட்டோல் தான், கிருமிநாசினி.

“நான் உட்பட, குடிநுழைவு துறை அதிகாரிகள் அனைவர் மீதும்கூட தெளிக்கப்பட்டது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

சமீபத்தில், ஜூன் 1 முதல் ஜூன் 14 வரையில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0   நடைமுறையில் இருக்கும்போது, ஆவணமற்றக் குடியேறிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீன் விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வியாழக்கிழமை, விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஹம்சா, ஆவணமற்றப் புலம்பெயர்ந்தோருக்குக் கோவிட் -19 தடுப்பூசி கொடுக்க முடியாது என்று கூறினார்.

செல்லுபடியாகும் ஆவணங்களுக்காக பதிவு செய்யவும், தடுப்பூசிகளைப் பெறவும், பின்னர் நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது இங்கு சட்டப்பூர்வமாக வேலை செய்யவோ அவர்களுக்கு உதவுவது “இந்த நடவடிக்கையாகும்” என்று அவர் கூறினார்.

இந்த நடவடிக்கை, செல்லுபடியாகும் ஆவணங்களுக்காகப் பதிவு செய்யவும், தடுப்பூசிகளைப் பெறவும், பின்னர் நாட்டை விட்டு வெளியேறுவதா அல்லது இங்கேயே சட்டப்பூர்வமாக வேலை செய்வதா என்பதை அவர்களே முடிவு செய்யவும் உதவும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக மட்டுமே குடிநுழைவுத் துறை நடவடிக்கை எடுத்தது, ஆனால் அவர்களது முதலாளிகளை நீதிமன்றத்தில் தடுத்து வைக்கவோ அல்லது வழக்குத் தொடரவோ இல்லை என்றக் குற்றச்சாட்டை கைருல் டைமி மறுத்தார்.

“இந்தக் குற்றச்சாட்டு உண்மையல்ல, 2019-ஆம் ஆண்டில் குடிநுழைவு சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக 1,052 முதலாளிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர், மொத்தம் RM19.3 மில்லியன் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது,” என்று பெர்னாமா மேற்கோளிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், 130 முதலாளிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர், மொத்த தண்டம் RM10 மில்லியனுக்கும் அதிகமாகும் என்றும் அவர் சொன்னார்.

இதற்கிடையே, கடந்த மாதம் வரையில், 130 முதலாளிகளுக்கு மொத்தம் RM3.2 மில்லியன் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.