முகக்கவரி அணியவில்லை – தாஜுடினுக்கு RM1,500 தண்டம்

பிரசாரனா மலேசியா பெர்ஹாட்டின் முன்னாள் தலைவர், தாஜுடின் அப்துல் இரஹ்மான், கடந்த மாதம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது முகக்கவரி அணியாததற்காக RM1,500 தண்டம் விதிக்கப்பட்டது.

தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் (தொற்றுநோய்களின் உள்ளூர் பகுதிகளில் நடவடிக்கைகள்) விதிமுறைகள் 2021-ன் கீழ், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து, இந்தத் தண்டம் சுமத்தப்பட்டதாக டாங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. மொஹமட் ஜைனல் அப்துல்லா தெரிவித்தார்.

பதிவுக்காக, கடந்த மே 25 அன்று, கோலாலம்பூர், கே.எல்.சி.சி. எல்.ஆர்.டி. நிலையம் அருகே இரண்டு எல்.ஆர்.டி. இரயில்கள் விபத்துக்குள்ளானது தொடர்பில், அம்னோ தேர்தல் குழு இயக்குநராகவும் இருக்கும் தாஜுடின் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.

முகமது ஸைனலின் கூற்றுப்படி, விரைவில் தாஜுடினுக்கு RM1,500 தண்டம் வழங்கப்படும்.

“எனவே, கோவிட் -19 தொற்றுநோயை எதிர்ப்பதில் தேசியப் பாதுகாப்பு மன்றம் வகுத்துள்ள செந்தர இயங்குதல் நடைமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறூ அரச மலேசியக் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

எல்.ஆர்.டி. இரயில் விபத்து சம்பவம் தொடர்பாக, கடந்த மாதம் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், தாஜுடின் அதிகாரிகள் பரிந்துரைத்தபடி முகக்கவரி இல்லாமல் முகக் கவசம் மட்டுமே அணிந்திருந்தார்.

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் இரஹ்மான், இந்த விவகாரம் தொடர்பாக தாஜுடினுக்கு எதிராக முன்பு போலீஸ் புகார் அளித்திருந்தார்.

மே 27-ம் தேதி, கோலாலம்பூர், டாங் வாங்கி காவல் நிலையத்தில் சாட்சியம் அளிக்க தாஜுடின் அழைக்கப்பட்டார்.