வெள்ளம், மண் சரிவு: இலங்கையில் 6 பேர் பலி

நிலச்சரிவில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணி

இலங்கையில் திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.

வானிலை மாற்றத்தினால் 2 பேர் காயமடைந்துள்ளதுடன், 5 பேர் காணாமல் போயுள்ளதாக நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை சீற்றம் காரணமாக 45,380 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

39 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி

கொழும்பு, இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கேகாலை ஆகிய மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக காணப்படுகின்றன.

இரத்தினபுரி பகுதியில் நேற்றைய தினம் வீடொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

அதே வீட்டைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்திருந்ததுடன், மற்றுமொரு காணாமல் போயிருந்தார்.

இலங்கை கடலில் எரிந்து மூழ்கும் கப்பல்: மிக ஆபத்தான அமிலங்கள் சிந்தும் அபாயம்

இலங்கை தமிழர்கள், முஸ்லிம்களுக்கு குரல் கொடுத்த இடது சாரி பௌத்த பிக்கு கொரோனாவுக்கு பலி

மேலும், இரத்தினபுரி பகுதியில் நீரில் அடித்துச் சென்று ஒருவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

புத்தளம் – மாதம்பே பகுதியில் நீரில் அடித்துச் சென்று ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 வயதான சிறுவனொருவர் காணாமல் போயுள்ளார்.

இதேவேளை, கேகாலை – அரநாயக்க பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மீட்புப் பணி

மேலும், கேகாலை – வரகாபொல பகுதியில் மற்றுமொரு இடத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஆண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு நாட்டில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் எதிர்வரும் ஓரிரு தினங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

BBC