அமெரிக்காவுக்கு AS$1.3 பில்லியனைச் செலுத்த, கோல்ட்மேனுக்கு 10 நாட்கள் அவகாசம்

1எம்டிபி ஊழல் தொடர்பில், கோல்ட்மேன் சாச்ஸ் குழுமம், அதன் AS$2.3 தீர்வு பங்கில் மீதமுள்ள AS$ 1.26 பில்லியனை அமெரிக்க அதிகாரிகளுக்குச் செலுத்த 10 நாட்கள் அவகாசம் உள்ளது.

ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, ஜூன் 4-ம் தேதி அமெரிக்க அரசாங்கத்தால் கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் 10 நாள் கால அவகாசம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோல்ட்மேன் சாச்ஸ், கடந்த ஆண்டு அமெரிக்க நீதித்துறையுடன் வழக்கை நிலுவையில் வைக்க ஓர் ஒப்பந்தத்தை எட்டியது.

ஆரம்பத்தில், கோல்ட்மேன் சாச்ஸ் மற்றும் மலேசியாவில் உள்ள அதன் கிளை நிறுவனம், அமெரிக்க ஊழல் எதிர்ப்பு சட்டங்களை மீறி ஐந்தாண்டு திட்டத்தில் ஈடுபட சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

நீதித்துறையின் கூற்றுப்படி, மலேசியா மற்றும் அபுடாபி அதிகாரிகளுக்கு வணிக நடவடிக்கைகளுக்காக, 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான கையூட்டு கொடுக்கும் திட்டம் தொடர்பாக கோல்ட்மேன் சாச்ஸ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அந்த நேரத்தில், நஜிப் ரசாக் மலேசியாவின் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் இருந்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் சென். பெர்ஹாட்டுக்குச் சொந்தமான RM42 மில்லியனுடன் தொடர்புடைய அதிகாரத் துஷ்பிரயோகம், நம்பிக்கை மீறல் மற்றும் பணமோசடி வழக்குகளில் நஜிப் குற்றவாளி என குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனை எதிர்த்து நஜிப் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

1எம்டிபி நிதியில், RM2.28 பில்லியனைத் தவறாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டு விசாரணையையும் நஜிப் எதிர்கொண்டார்.

1எம்டிபி மற்றும் எஸ்.ஆர்.சி.யின் கடன்களை அடைக்க மலேசியாவுக்கு இன்னும் பல ஆண்டுகள் தேவை.

ஜூன் 3 நிலவரப்படி, 1எம்டிபி-இன் கடன் RM39.66 பில்லியனாகவும், எஸ்.ஆர்.சி.யின் கடன் RM2.57 பில்லியனாகவும் இருந்தது.