சிகாமாட்டில் உள்ள என்.ஜி.ஓ.க்கள் சமூகத்திற்கு உதவுவதைத் தடுத்ததில்லை – சந்தாரா

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் சந்தாரா குமார், சமூகத்திற்கு, குறிப்பாக சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில், சமூகத்திற்கு உதவும் அரசு சாரா நிறுவனங்களைத் (என்ஜிஓ) தடுப்பதாகக் கூறப்படுவதை மறுத்தார்.

“சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு, ஜூன் 6, 2021 தேதியிட்டு, எனது முகநூல் பக்கத்தில் ஓர் அறிக்கை விடப்பட்டது, நாடாளுமன்ற உறுப்பினரான நான் சமூகத்திற்கு, குறிப்பாக சிகாமாட் நாடாளுமன்றத்தில், அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓ) வழங்கும் உதவிகளைத் தடுப்பதாக அதில் கூறப்பட்டது.

“அந்த முகநூல் உரிமையாளர் வெளியிட்ட அவதூறு அறிக்கையை நான் கடுமையாக மறுக்கிறேன்,” என்று அவர் ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

சிகாமாட்டில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, அறுவை சிகிச்சைக்குத் தேவைபடும் நிதியுதவியை வழங்க முடியாமல் போனது என்று கூறி, முகநூல் வழியாக ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் வெளியிட்ட பதிவைத் தொடர்ந்து சந்தாரா இதனைத் தெரிவித்தார்.

புசாட் பெர்கெம்பாங்கான் டிடிக் இஸ்திமேவா செகால் என்ற அந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனம், நோயாளிக்காக சேகரிக்கப்பட்ட நிதி வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்றும் கூறியது.

எவ்வாறாயினும், முகநூல் உரிமையாளர் குறிப்பிடும் பாதிக்கப்பட்டவர் குறித்து தெரியவந்த உடனேயே, சிகாமாட் நாடாளுமன்ற அலுவலகம் அவருக்கு உதவியது என்று கூறினார்.

“சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மக்களின் நலன் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்துவதில், ஒத்துழைக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை நான் எப்போதும் வரவேற்கிறேன், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

“இருப்பினும், மக்கள் கடினமான காலகட்டத்தில் இருக்கும் நேரத்தில், அவதூறு பேசி, தூண்டிவிடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நடவடிக்கைகள் பொருத்தமானவை அல்ல; எந்த நன்மைகளையும் தராத அரசியல் விளையாட்டுக்கு நேரம் இதுவல்ல.

“அரசியல் செய்வதைக் குறைத்து, மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்,” என்று அவர் கூறினார்.

சமீபத்திய வளர்ச்சியில், அத்தன்னார்வத் தொண்டு நிறுவனம் சந்தாரா மீதான குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற்றுள்ளது.

அந்நிறுவனத்தின் பிரதிநிதி, டோரீன் ஸ்க் போங் சந்தாராவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, சந்தாராவின் அதிகாரிகள் அந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு எதிராக போலிஸ் புகார் செய்துள்ளதையும் டோரீன் உறுதிப்படுத்தினார்