இன்று 6,849 புதிய நேர்வுகள், அவற்றில் பாதி கிள்ளான் பள்ளத்தாக்கில்

கோவிட் 19 | கடந்த 24 மணி நேர இடைவெளியில், மேலும் 6,849 புதியக் கோவிட் -19 நேர்வுகள் கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நான்கு நாட்களாகச் செயலில் உள்ள நேர்வுகளில் சரிவு தொடர்கின்றது, ஆனால் தீவிரச் சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கோவிட் -19 தொற்று காரணமாக, ஜூன் மாதத்தில் மட்டும் 972 பேர் இறந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 3.7 இறப்புகளாகக் கணக்கிடப்படுகிறது, இது 2020-ல் சாலை விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட ஏழு மடங்கு அதிகம் ஆகும்.

இதற்கிடையில், இன்று 84 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 3,768 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 7,749 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 458 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (2,558), கோலாலம்பூர் (884), சரவாக் (699), நெகிரி செம்பிலான் (685), ஜொகூர் (426), சபா (309), கிளந்தான் (248), பினாங்கு (205), லாபுவான் (176), மலாக்கா (170), கெடா (161), பேராக் (161), பஹாங் (89), திரெங்கானு (66), புத்ராஜெயா (10), பெர்லிஸ் (2).

மேலும் இன்று, 18 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 12 பணியிடத் திரளைகள் ஆகும்.