தொற்றுநோயை 4,000-க்குக் கீழ் குறைக்க, அடுத்த 2 வாரங்கள் முக்கியமான காலகட்டம் – எச்.டி.ஜி.

முழு கதவடைப்பின் அடுத்த இரண்டு வாரங்கள், நாட்டில் தினசரி கோவிட் -19 நோய்த்தொற்று எண்ணிக்கையை 4,000-க்கும் கீழ் குறைக்க மிகவும் முக்கியமான காலகட்டம் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் (எச்.டி.ஜி.) டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இந்தக் காலகட்டத்தில், கோவிட் -19 நோய்த்தொற்றின் வளைவை நேர் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம், ஏனெனில் தினசரி நேர்வுகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே உள்ளது.

ஆனால், சிலர் இன்னும் தேவையின்றி பயணம் செய்வதும், பல நிகழ்ச்சிகளில் ஒன்று கூடி கொண்டாடுவதும் ஏமாற்றமளிப்பதாக அவர் சொன்னார்.

“இது பொறுப்பற்ற செயல்,” என்று அவர் நேற்று இரவு தனது கீச்சகத்தின் மூலம் தெரிவித்தார்.

மலேசியாவில், நேற்று 5,793 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய நாள் 6,849 வழக்குகளுடன் ஒப்பிடும்போது, கடந்த 24 மணி நேரத்தில் மொத்த தினசரி மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை 8,334-ஐ எட்டியது, இது தொற்றுநோய் நாட்டைத் தாக்கியதில் இருந்து அதிகபட்சமாகும்.

ஜூன் 1 முதல் 14 வரையில், 14 நாட்களுக்கு நாடு முழுவதும் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளின் முழு கதவடைப்பின் முதல் கட்டத்தை, அரசாங்கம் மே 28-ம் தேதி அன்று அறிவித்தது.

இது தற்போது ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • பெர்னாமா