‘கோல் கம்பத்தை நகர்த்தவில்லை, நடுவர் சரியான தீர்ப்பு வழங்கவே உதவி’ – தக்கியுடின்

அவசரகாலத்தில், அமைச்சரவைக் “கோல் கம்பத்தை நகர்த்தும்” பணியைச் செய்கிறது எனும் குற்றச்சாட்டை, பிரதமர் திணைக்கள (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர், தக்கியுடின் ஹாசன் மறுத்தார்.

அதற்குப் பதிலாக, “நடுவர்கள்” சரியான முடிவுகளை எடுக்க உதவும் பொருட்டு, அமைச்சரவை விதிகளைத் “திருத்துகிறது” என்று அவர் கூறினார்.

“யாரும் கோல் கம்பத்தை நகர்த்தவில்லை, நடுவர் சரியான தீர்ப்பை வழங்க உதவும் வகையில் விளையாட்டின் விதிகளைச் சரிசெய்கிறோம் அவ்வளவுதான்.

“ஓர் இலக்கை அடைவது என்பது கோல் கம்பங்களை மாற்றுவதாக அர்த்தப்படாது,” என்று அவர் நேற்று இரவு கீச்சகம் வழியாகக் கூறினார்.

விளையாட்டின் விதிகளைத் “திருத்துவது” என அவர் சொல்வதில் என்ன அர்த்தம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அவசரகால நீட்டிப்பு தொடருமா, இல்லையா என்பது குறித்து யாங் டி-பெர்த்துவான் அகோங்கிற்கு அமைச்சரவை ஆலோசனை வழங்கும் என்ற தனது அறிக்கையை, மக்களவை துணை சபாநாயகர், அஸலினா ஓத்மான் சைட் விமர்சித்ததைத் தொடர்ந்து தக்கியுடின் இவ்வாறு பதிலளித்தார்.