கிளாந்தானில் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி – ஜே.கே.என்.கே.

கிளாந்தான் மாநிலச் சுகாதாரத் துறை (ஜே.கே.என்.கே.), வீடு வீடாகச் சென்று கோவிட் -19 தடுப்பூசி போடும் நடவடிக்கையைச் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத் தடுப்பூசி மையங்கள் (பிபிவி) மற்றும் அவுட்ரீச் திட்டம் உட்பட, தற்போதுள்ள தற்காலிக பிபிவி மூலம் தடுப்பூசி செயல்முறையை முடித்த பின்னர், வீடுவீடாகச் சென்று தடுப்பூசி போடும் திட்டத்தைத் தொடங்க தனது தரப்பு திட்டமிட்டுள்ளதாக ஜே.கே.என்.கே. இயக்குநர் டாக்டர் ஸைய்னி ஹுசின் தெரிவித்தார்.

“இது (அவுட்ரீச் திட்டம்) விரைவாக முடிக்க முடிந்தால், மாற்றுத்திறனாளிகள், வீடற்றவர்கள் போன்றோருக்கு, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வீடு வீடாகத் தடுப்பூசிகளை வழங்கத் தொடங்குவோம்,” என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.

முன்னாள் தேசிய தடகள வீரர் ஒருவரைத் தீயணைப்பு படையினர் பிபிவிக்குத் தடுப்பூசி போட கொண்டுசென்றது, சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, அவருக்கு வீட்டில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யாத தொடர்புடைய தரப்பினரின் நடவடிக்கைகள் குறித்து நெட்டிசன்களிடையே கேள்விகள் எழுந்தது குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த டாக்டர் ஸைய்னி, வீடு வீடாகத் தடுப்பூசி போடச் செல்ல செவிலியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பலர் சம்பந்தப்பட்ட ஏராளமான ஊழியர்கள் தேவைபடுவர் என்றார்.

இதற்கிடையே, கிளாந்தான் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ், இதுவரை 145,447 பேர் தங்களது தடுப்பூசியின் முதல் மருந்தளவையும், 64,943 பேர்  இரண்டாவது மருந்தளவையும் நிறைவு செய்துள்ளதாகவும் டாக்டர் ஸைய்னி தெரிவித்தார்.

  • பெர்னாமா