அவசரகாலச் சிறப்பு செயற்குழுவின் தலைவர் இன்று அகோங்கைச் சந்திக்கிறார்

2021 அவசரகாலச் சுயாதீனச் சிறப்பு செயற்குழுவின் தலைவர் அரிஃபின் ஜகாரியா, இன்று மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயத்துதீன் அல்-முஸ்தபா பில்லாவைச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்ட்ரோ அவானியின் கூற்றுப்படி, முன்னாள் தலைமை நீதிபதியுமான அரிஃபின், இன்று காலை 9.45 மணியளவில், கருப்புநிற புரோட்டான் பெர்டானா காரில் இஸ்தானா நெகாராவின் கேட் 2-க்குள் நுழைவது தெரிந்தது.

கடந்த வாரம், அரசியல் கட்சித் தலைவர்களுடன் சுல்தான் அப்துல்லாவின் தொடர்ச்சியான சந்திப்புகளுக்குப் பின்னர் இந்த அமர்வு இன்று நடைபெறுகிறது.

அவசரகால அமலாக்கத்தை நிறுத்துதல் அல்லது நீட்டித்தல் குறித்து, அகோங்கிற்கு ஆலோசனை வழங்குவதற்காக 2021 அவசரகாலச் சுயாதீன சிறப்புக் குழு, அவசரகால (அத்தியாவசிய அதிகாரங்கள்) கட்டளைச் சட்டம் 2021 பிரிவு 2-ன் படி நிறுவப்பட்டது.

இந்தக் குழுவில், பொது சுகாதாரம், கல்வி, பொது நிர்வாகம் மற்றும் சட்டம் ஆகியவற்றில் வல்லுநர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் முப்திகள் என 19 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்தச் செயற்குழு கூட்டம் தொடர்பாக அதிகம் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதனால், அச்செயற்குழுவை இன்னும் வெளிப்படையாக இருக்குமாறு பல தரப்பினர் வலியுறுத்தினர்.

இருப்பினும், சிலர் கோரியபடி, தனது தரப்பால் அறிக்கையைப் பொதுவில் முன்வைக்க முடியாது என்று அரிஃபின் முன்பு கூறியிருந்தார்.

“என்னால் சொல்ல முடியாது, இதையெல்லாம் செயலகம்தான் கேட்க வேண்டும். இது அதனுடைய விதிமுறையாகும், ஏனென்றால் அனைத்தும் தனிப்பட்டது மற்றும் இரகசியமானது. நாங்கள் அகோங்கிடம் மட்டுமே அறிவிக்க வேண்டும்,” என்று ஜூன் 11 அன்று மலேசியாகினியிடம் அரிஃபின் கூறினார்.

அரிஃபின் தவிர, பிரதமர் முஹைதீன் யாசினும் இன்று சுல்தான் அப்துல்லாவை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.