கேன்சினோ, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகள் – சுகாதார அமைச்சு நிபந்தனையுடன் ஒப்புதல்

சீனாவின் கேன்சினோ பயோலாஜிக்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளை மலேசியாவில் பயன்படுத்த, நிபந்தனை பதிவு ஒப்புதலை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.

இன்று, மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையக் (பி.பி.கே.டி.) கூட்டத்தில் ஒப்புதல் முடிவு செய்யப்பட்டதாச் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“ஒரு பேரழி காலத்தின் போது பயன்படுத்துவதற்காக, நிபந்தனைக்குட்பட்ட பதிவு ஒப்புதலை வழங்க இன்றையக் கூட்டம் ஒப்புக் கொண்டது. கான்விடிசியா ரிகொம்பிநன்ட் நாவல் கொரோனா வைரஸ் தடுப்பூசி (அடினோவைரஸ் வகை 5 வெக்டர்) (Convidecia Recombinant Novel Coronavirus Vaccine [Adenovirus Type 5 Vector]), சீன நாட்டின் கேன்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனத்தையும், ஜேன்ஸ்சன் கோவிட் -19 தடுப்பூசி (Janssen COVID-19 Vaccine) அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தையும் சார்ந்த இவ்விரண்டு தடுப்பூசி தயாரிப்புகளும் ஒரு மருந்தளவு மட்டுமே தேவைப்படும்.

“(இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும்) உலகச் சுகாதார அமைப்பின் அவசரகாலப் பயன்பாட்டு பட்டியலில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

இன்றையக் கூட்டத்தில், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

முன்னதாக, மலேசியாவில் ஃபைசர் தடுப்பூசிக்கான ஒப்புதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.