ஜாஹிட்டுடன் அம்னோ அமைச்சர்கள் இன்று சந்திப்பு – இஸ்மாயில் சப்ரி மறுப்பு

இன்று, அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமீடியுடன், கட்சியின் அமைச்சர்கள் ஒரு சந்திப்பை நடத்தவுள்ளதாகக் கூறப்படுவதை அம்னோ உதவித் தலைவர் மறுத்தார்.

“இது (செய்தி) பொய்யானது, அத்தகையக் கூட்டம் எதற்கும் அழைப்பு இல்லை,” என்று மூத்த அமைச்சருமான இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, அம்னோ செயற்பிரிவு செயலாளர் மொஹமட் சுமாலி ரெடுவானும் இதேபோன்ற பதிலை அளித்தார்.

“கூட்டம் எதுவும் இல்லை. இது வெறும் வதந்திதான்,” என்று அவர் கூறினார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில், கோலாலம்பூர் பி.டபிள்யூ.தி.சி.யில் உள்ள கட்சியின் தலைமையகத்தில், ஜாஹிட்டுடன் ஒரு சந்திப்பை நடத்த அம்னோவைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு இஸ்மாயில் அழைப்பு விடுத்ததாக சுவாரா டிவி போர்ட்டலின் அறிக்கை கூறியதைத் தொடர்ந்து, மலேசியாகினி கட்சித் தலைவர்கள் பலரைத் தொடர்பு கொண்டார்.

இருப்பினும், இந்த விஷயத்தை உண்மையென உறுதிப்படுத்திய சில ஆதாரங்களும் இருந்தன, ஆனால் அவர்களின் பெயர்களை வெளியிட அவர்கள் விரும்பவில்லை.