மீண்டும், ஆட்சி பீடத்தில் அமர  துடிக்கும் மகாதீர்

இராகவன் கருப்பையா- விடாக்கண்டன் கொடாக்கண்டன் எனும் வாசகம் அநேகமாக முன்னாள் பிரதமர்  மகாதீருக்கு மிகப் பொருத்தமாக அமையும்.

கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து 22 வருடங்களுக்கும் 2018ஆம் ஆண்டிலிருந்து 22 மாதங்களுக்கும் நாட்டை ஆண்ட அவர் எப்படியாவது இன்னொரு முறை தலைமை பொறுப்பை ஏற்கத் துடித்துக் கொண்டிருப்பதை நம்மால் நன்றாகவே உணர முடிகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பக்காத்தான் ஆட்சி கவிழ்வதற்குக் காரணமாக இருந்த அவரை இடைக்கால பிரதமராகப் பேரரசர் நியமித்த போது, ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்து 3ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற அவர் எண்ணம் கொண்டிருந்தார்.

ஆனால் அந்த யோசனைக்கு இணங்காத பேரரசர், முஹிடினை ஆட்சியமைக்க அழைத்ததால் பெருத்த ஏமாற்றமடைந்தார் மகாதீர்.

இந்நிலையில் நாட்டின் அரசியலில் இவ்வாரம் ஏற்பட்டுள்ள சலசலப்பைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தனது இலட்சியத்தை நிறைவேற்ற மீண்டும் ஒரு வியூகத்தை அவர் வரைந்துள்ளதாக தெரிகிறது.

நடப்பு அரசாங்கம் அவசரக்கால சட்டத்தை அமலாக்கம் செய்து மீண்டும் ஒரு முழு முடக்கத்தை அமல்படுத்தியுள்ள போதிலும் கோறனி நச்சிலின் தொற்றும் அதனாலான மரணங்களும் குறையாததால் நாட்டின் நிர்வாகத்தில் பேரரசர் மீண்டும் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களை தனித்தனியாக வரவழைத்துக் கலந்தாலோசித்த பேரரசர் எந்த கட்சியிலும் அங்கம் வகிக்காத மகாதீரையும் அழைத்தது எல்லாருக்குமே சற்று வியப்புதான்.

‘பெஜுவாங்’ எனும் தனது புதிய கட்சிக்கு இன்னமும் அரசாங்க அங்கீகாரம் கிடைக்காத சூழலில் லங்காவி தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலை மட்டும்தான் அவருக்கு இப்போது உள்ளது.

எனினும் பேரரசரின் அழைப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மகாதீர் எம்மாதிரியான யோசனையைப் பேரரசரிடம் பரிந்துரைத்தார் என்பதுதான் நாட்டு மக்களை பெரும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

அதாவது கடந்த 1969ஆம் ஆண்டில் நிகழ்ந்த மே 13 கலவரங்களுக்கும் பிறகு அமைக்கப்பட்ட ‘மகேரான்’ எனப்படும் தேசிய நடவடிக்கை மன்றத்தைப் போல ஒரு குழுவை அமைத்து நாட்டை நிர்வாகம் செய்யலாம் என்றும் அம்மன்றத்திற்கு தலைமையேற்கத் தாம் தயார் என்றும் பேரரசரிடம் மகாதீர் பரிந்துரைத்தார்.

ஆளும் கட்சியினர் மட்டுமின்றி எதிர்க்கட்சி தலைவர்களையும் ஒருசேர வியப்பில் ஆழ்த்திய இந்த  யோசனை மகாதீரின் உள்நோக்கத்தைத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது என்றால் அது மிகையில்லை.

முஹிடினும் இதர அமைச்சர்களும் மௌனம் காக்கும் வேளையில் பக்காத்தான் தலைவர்களும் அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட்டும் இதற்கு உக்கிரமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த யோசனையானது ஆட்சியைப் பிடிக்க அப்பட்டமான ஒரு முயற்சி என எதிர்க்கட்சி தலைவர் அன்வார் சற்று காட்டமாகவே கருத்துரைத்தார்.

மீண்டும் ஒரு முறை மகாதீரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது எனும் நிலைப்பாட்டை பொது மக்களும் கூட உறுதியாகக் கொண்டுள்ளதை நம்மால் உணர முடிகிறது.

ஆனால் உலகிலேயே 96 வயதில் இன்னொரு முறை நாட்டை ஆள வேண்டும் எனும் நோக்கத்தில் காய்களை நகர்த்தி வரும் ஒரு அரசியல்வாதி என்றால் அது மகாதீரைத் தவிர வேறொருவர் இருக்க முடியாது.

எது எப்படியாயினும் இறுதி முடிவு பேரரசரின் கையில்தான் உள்ளது.

நாட்டு நடப்பு தொடர்பாகப் புதன் கிழமையன்று சக ஆட்சியாளர்களைச் சந்திக்கும் பேரரசர் அந்தக் கூட்டத்திற்குப் பிறகு அவசரக்கால சட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவாரா, நாடாளுமன்றம் கூட வேண்டும் என உத்தரவிடுவாரா, அதிக அளவில் வெறுப்பைச் சம்பாதித்துள்ள முஹிடினை பதவி விலக பரிந்துரைப்பாரா, புதிய அரசாங்கம் அமைக்க வேரொரு கூட்டணியை அழைப்பாரா அல்லது மகாதீரின் யோசனையை எற்றுக் கொள்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நோய்த் தொற்று மிகக் கடுமையாகவும் மரண எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளபடியால்  பொதுத்தேர்தல் நடத்தப் பரிந்துரைப்பது முற்றிலும் சாத்தியமில்லை என்றே தெரிகிறது.