அமைச்சர் : வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பணி உய்த்துணர் பயிற்சிகள்

மலேசியாவில் பணிபுரிய வரும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும், பணி உய்த்துணர் பயிற்சி வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சர் எம் சரவணன் உறுதியளித்தார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பணி, தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நமது நாடு தொடர்பான தகவல்கள், உள்ளூர் மொழி தவிர, பிற பழக்கவழக்கங்கள் பற்றிய அடிப்படை அறிவு வழங்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று அவர் விளக்கினார்.

“எதிர்காலத்தில், அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும், மலேசியாவில் வேலையைத் தொடங்குவதற்கு முன்னதாக, 48 மணி நேரம் பணி உய்த்துணர் பயிற்சிகளில் கலந்துகொள்வார்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

“வெளிநாட்டு தொழிலாளர்கள் நம் நாட்டில் தங்கள் உரிமைகளை அறிந்து கொள்வதை உறுதி செய்வதற்கே இந்த நடவடிக்கை,” என்று அவர் தனது முகநூலில், நேற்றிரவு நடந்த ஒரு நேரடி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மலேசியாவில் உள்ள ஓர் உணவகத்தில் பணிபுரியும் போது, இந்திய நாட்டு தொழிலாளர் ஒருவர் மீது அதிகார அத்துமீறல் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையில், உள்துறை அமைச்சு (கே.டி.என்.) மற்றும் மனிதவள அமைச்சின் (கே.எஸ்.எம்.) அமலாக்க அதிகாரிகள், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அந்த மெய்நிகர் பேச்சு நிகழ்ச்சியில், நன்கு அறியப்பட்ட இந்தியத் தொலைக்காட்சி பிரபலமான இலட்சுமி இராமகிருஷ்ணன் மற்றும் மலேசியாவில் பணிபுரிந்ததாகக் கூறப்படும் இந்திய நாட்டவரான, வேலாயுதம் இருவரும் சரவணனோடு கலந்துகொண்டனர்.

தற்போது தமிழகத்தில் இருக்கும் வேலாயுதம், சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், அவரும் மற்றொரு இந்தியரும் உணவக உரிமையாளர்களில் ஒருவரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறினார்.

உணவகத்தில் பணிபுரியும் போது, தனது நண்பர் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், நாட்டிற்கு வந்தவுடன் வெளிநாட்டு தொழிலாளர்களுக்குப் பணி உய்த்துணர் பயிற்சிகள் வழங்கப்படும் என்று சரவணன் கூறினார்.

மலேசியாவில் உள்ள முதலாளிகளால், இந்தியர்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் சரவணன் உறுதியளித்தார்.

“மலேசிய அரசு தமிழக அரசுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளது.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) நிறைவடைந்த பின்னர், வெளிநாட்டு தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து நாங்கள் கலந்துரையாடுவோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.