2-ஆம் கட்ட பிபிஆர் : விண்ணப்பத்தாரர்களுக்கு உதவும் வகையில் இலகுவாக்கவும்

மக்கள் பராமரிப்பு உதவிநிதியின் (பிபிஆர்) இரண்டாம் கட்டத்தை அங்கீகரிப்பதில், நிதி அமைச்சு நெகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று ஈப்போ திமோர் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் கா வோ வலியுறுத்தினார்.

இரண்டாம் கட்ட பிபிஆர்-க்குத் தகுதி பெறாதவர்கள், உள்நாட்டு வருவாய் வாரியத்தில் (எல்.எச்.டி.என்.) தங்கள் முறையீடுகளைச் சமர்ப்பிக்கலாம் என்று வோங் கூறினார்.

முன்னதாக எல்.எச்.டி.என்.னுடன் சந்திப்பு நியமனங்களைப் பெற்று இதைச் செய்ய வேண்டும், ஆனால் நாடு முழுவதும் பல சந்திப்பு இடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளன.

மேல்முறையீட்டு காலம் ஜூன் 15-ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 வரை நீடிக்கும். இதற்கிடையில், பி.கே.பி. 3.0 ஜூன் 28-ம் தேதி முடிவடையும்.

முறையீடுகளை இயங்கலையிலும் செய்யலாம் என்றாலும், தொழில்நுட்ப ரீதியாக திறமை இல்லாதவர்கள் இன்னும் எல்.எச்.டி.என். அலுவலகத்தையே நாட வேண்டியுள்ளது என்று வோங் கூறினார்.

சந்திப்பு நியமன முறை இருந்தபோதிலும், கடைசி நிமிடத்தில், பலர் பி.கே.பி. 3.0 முடிவடையும் போது எல்.எச்.டி.என். அலுவலகங்களுக்கு வருவார்கள் என்று வோங் கவலை தெரிவித்தார்.

“குறிப்பிட்டக் காலக்கெடுவில், மேல்முறையீட்டு ஆவணங்களை ஒப்படைக்க எல்.எச்.டி.என். கிளைகளுக்கு மக்கள் திரண்டு வந்தால், அது மீண்டும் ஓர் ஆபத்தை உருவாக்கக்கூடும்,” என்று அவர் கூறினார்.

பிபிஆர் உதவியைப் பெற தகுதியான முதலாம், இரண்டாம் கட்ட பெறுநர்களின் விண்ணப்பங்களைத் தானாகவே அனுமதிப்பதன் வழி, இந்தச் செயல்முறையை எளிதாக்கலாம் என்று வோங் கூறினார்.

“இந்த ஆண்டு ஆறு மாதக் காலத்திற்குள், பி.கே.பி. 2.0 மற்றும் பி.கே.பி. 3.0 அமல்படுத்தப்பட்டதால் மக்களுக்கு இப்போது அரசாங்கத்தின் உதவி தேவைப்படுகிறது.

“தற்போது, விண்ணப்பதாரர்கள் அல்லது பெறுநர்களின் தகுதி குறித்த எந்தவொரு மதிப்பாய்வும் அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கக்கூடாது, ஏனென்றால் ஜனவரி 2021 (பிபிஆர் கட்டம் 1) உடன் ஒப்பிடும்போது, 2021 மே மாதத்தில் (பிபிஆர் கட்டம் 2) மக்கள் பணக்காரர்களாக மாறியிருக்க மாட்டார்கள் என்பது உறுதி,” என்றார் அவர்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் முறையீடுகளைச் சமர்ப்பிக்க, அரசு அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேல்முறையீட்டு செயல்முறை, விண்ணப்பதாரர்களுக்கு அழுத்தம் கொடுப்பதால், அதில் சற்று நெகிழ்வை வைக்குமாறு வோங் நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸை வலியுறுத்தினார்.

“மக்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில் நடைமுறைக்கு ஏற்றவாறும், நெகிழ்வுத்தன்மையுடனும் இருக்க வேண்டும். அரசாங்க உதவிகள் விரைவில் மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டுமென்றும், தேவையற்ற அதிகாரத்துவத்தைக் குறைக்க வேண்டுமென்றும் நான் தெங்கு ஜஃப்ருலைக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.