டாஷ் நெடுஞ்சாலையில் இரும்பு சாரக்கட்டு சரிந்தது, 2 தொழிலாளர்கள் காயம்

நேற்று மாலை, கட்டுமானத்தில் இருந்த டாமான்சாரா ஷா ஆலாம் உயரடுக்கு நெடுஞ்சாலையின் (டாஷ்) இரும்பு சாரக்கட்டு (iron scaffolding) இடிந்து விழுந்ததில், இருவர் காயமடைந்தனர்.

வடக்கு புது கிள்ளான் நெடுஞ்சாலையில் இருந்து (என்.கே.வி.இ.) கோத்த டாமான்சாரா வெளியேறும் சாலை அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

டாஷ் மேம்பாட்டு நிறுவனமான புரோலிண்டாஸ், நேற்று இரவு ஓர் அறிக்கையில், அந்தப் பகுதியில் வேலைகளை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.

முன்னதாக, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், கான்கிரீட் மற்றும் இரும்பு சாரக்கட்டு 12 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்ததாகக் கூறினர்.

இரண்டு வெளிநாட்டு தொழிலாளர்களும், சம்பவம் நடந்த நேரத்தில் கட்டுமானத்தில் இருந்த சாலையின் கீழ் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.

சிறுசிறு இரும்புத் துண்டுகளால் மட்டுமே தாக்கப்பட்டதால், அவர்கள் இருவருக்கும் இலேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு, நெடுஞ்சாலை தொடர்பாக நடந்த மூன்றாவது விபத்து இதுவாகும்.

கடந்த மார்ச் 3-ம் தேதி, சுங்கை பெசி-உலு கிள்ளான் (சுக்) நெடுஞ்சாலையில், ஒரு டிரெய்லர் டிரக் இரும்பு சாரக்கட்டு மீது மோதியதில், கட்டுமானத்தில் இருந்த பாலம் ஓடிக்கொண்டிருந்த ஒரு வேனின் மீது இடிந்து விழுந்தது. அவ்விபத்தில் இருவர் கொல்லப்பட்டதோடு, மூவர் காயமடைந்தனர்.

பின்னர் மார்ச் 22-ஆம் தேதி, சுக் நெடுஞ்சாலையில் ஒரு கிரேன் இடிந்து விழுந்து மூவர் கொல்லப்பட்டனர்.

சுக் நெடுஞ்சாலையின் மேம்பாட்டாளர் இதே புரோலிண்டாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.