வெளிநாட்டு தொழிலாளர் துன்புறுத்தல் வழக்கு, உணவக மேற்பார்வையாளர் கைது

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்ததாக நம்பப்படும் ஒரு சம்பவத்தில், வெளிநாட்டு தொழிலாளர்கள் துன்புறுத்தல் மற்றும் அதிகார அத்துமீறல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஓர் உணவகத்தின் முன்னாள் மேற்பார்வையாளரைப் போலீசார் தடுத்து வைத்தனர்.

பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. மொஹமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீத், இந்தியத் தொலைக்காட்சி நிலையம் ஒன்று ஒளிபரப்பிய நேர்காணலில் ஓர் இந்தியத் தொழிலாளி வெளிப்படுத்தியத் தகவல்களைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை 33 வயதுடைய அந்த உள்ளூர் நபர் கைது செய்யப்பட்டார் என்றார்.

ஓர் உணவகத்தின் முன்னாள் ஊழியர் என்று கூறிக்கொண்ட அந்த நபர், அங்குப் பணிபுரிந்த தனது அனுபவத்தை விவரித்தார், சம்பளம் கொடுக்கப்படாமல் தான் சுரண்டப்பட்டதாகவும், அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் அந்த நேர்காணலில் கூறினார்.

“அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு மார்ச் மாதம், தன்னுடன் வேலை செய்த இன்னொரு இந்தியரும், உணவகத்தின் முதலாளியால் இடுப்புப் பகுதிக்குக் கீழ் தீமூட்டி எரிக்கப்பட்டதைத் தான் கண்டதாகவும் அவர் சொன்னார்.

“இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போலிசார், 22 மற்றும் 34 வயதுடைய, உணவகத்தின் இன்னாள் மற்றும் முன்னாள் ஊழியர்கள் என்று கூறப்படும் பாதிக்கப்பட்ட இரண்டு இந்திய ஆண்களை மீட்டனர்,” என்று அவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர்கள் இருவர் மீதும் மேற்கொண்ட விசாரணையின் முடிவுகள், கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் சந்தேக நபரைக் கைது செய்ய வழிவகுத்ததாக மொஹமட் ஃபக்ருதீன் தெரிவித்தார்.

குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக, ஏற்கனவே ஆறு குற்றப் பதிவுகள் அச்சந்தேக நபர் மீது இருந்ததாகவும், நேற்று முதல் ஜூன் 24 வரையில், ஆறு நாட்கள்  அவர் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“இந்த வழக்கு ஆள் கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007 (அதிப்சம்), பிரிவு 13-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது, அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட இருவருமே பிரிவு 44 (2) அதிப்சம் 2007-இன் கீழ், 21 நாள் இடைக்கால பாதுகாப்பு ஆணைக்கு (ஐபிஓ) பின்னர் ஆண்கள் தங்குமிடம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

வீடியோ பதிவில் குற்றச்சாட்டை முன்வைத்த நபரைக் கண்டுபிடிப்பதற்குச் சர்வதேசக் காவல்துறை (இன்டர்போல்) உதவியையும் தனது தரப்பு நாடும் என்றும் மொஹமட் ஃபக்ருதீன் கூறினார்.

-பெர்னாமா