‘டிரைவ்-த்ரு’ சோதனை திட்டம் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் என்ன? – பக்ரி எம்.பி.

கோவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான சமூக ஈடுபாட்டில், மலேசியச் சுகாதார அமைச்சின் அர்ப்பணிப்பு குறித்து பக்ரி எம்.பி. இயோ பீ யின் கேள்வி எழுப்பினார்.

நேற்று, மூவாரில் அவரது அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இலவசக் கோவிட் திரையிடல் சோதனையை, ஜொகூர் மாநிலச் சுகாதாரத் துறை (ஜே.கே.என்.ஜே) நிறுத்தியதை அடுத்து அவர் இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.

“(சுகாதார அமைச்சர்) டாக்டர் ஆதாம் பாபா, சமூகத் திரையிடல் சோதனைகளுக்கு இப்போது ஏதேனும் குறிப்பிட்ட வழிமுறைகள் உள்ளதா?

“எங்கள் சமூகச் சோதனை திட்டம் (டிரைவ் த்ரு) இன்று காலை அதிகாரிகளால் நிறுத்தப்பட்டது, அதுமட்டுமின்றி, மருத்துவர் ஒருவரின் உரிமத்தை இரத்து செய்வதாக அச்சுறுத்தி உள்ளன்ர். இது முட்டாள்தனமானது,” என்று அவர் நேற்று கீச்சகத்தில் தெரிவித்துள்ளார்.

டிரைவ்-த்ரூ திரையிடல் சோதனையைப் – ஆர்டிகே-ஆன்டிஜென் (RTK-Antigen) கருவிகளுக்கு RM30 வசூலிக்கப்பட்டது – போலிசாரும் சுகாதார அதிகாரிகளும் நிறுத்தியதாக, நேற்று சின் சியூ டெய்லி செய்தி வெளியிட்டது.

அந்த அறிக்கையின்படி, இந்த நடவடிக்கை பொதுமக்களை வெகுவாக ஈர்த்து, அதனால் தொற்றுநோய் பரவத் தூண்டப்படும் என்ற அச்சத்தில் நிறுத்தப்பட்டது என சொல்லப்பட்டது.

இருப்பினும், ஜொகூர் பாருவிலும் கூலாயிலும் மக்கள் பிரதிநிதிகள் நடத்திய இதேபோன்ற நிகழ்ச்சிகள் நிறுத்தப்படவில்லை என்று பெந்தாயான் சட்டமன்ற உறுப்பினர் ங் யாக் ஹோவ் கூறியதாக அந்த அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.

இதற்கிடையில், சமூகச் சோதனை திட்டங்களைச் “சீர்குலைப்பதற்கு” பதிலாக, கோவிட் -19 சோதனை செய்ய விரும்பும் நபர்களுக்கு RM100-க்கு மேல் வசூலிக்கும் தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.