‘14 நாட்கள் நாடாளுமன்றம் திறப்பு : அம்னோ அரசியல் பணியகத்தின் முன்மொழிவு’

நாடாளுமன்றத்தை மீண்டும் திறக்க, அம்னோ வழங்கிய 14 நாள் காலக்கெடு அம்னோ அரசியல் பணியகத்தின் முன்மொழிவு, உச்சமன்றத்தின் பரிந்துரையல்ல என்று அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

கொள்கையளவில், அரசியல் பணியகம் ஒரு கருத்தைச் சமர்ப்பிக்க முடியும் என்றாலும், கட்சியின் முடிவு உச்சமன்றத்தின் முடிவுக்கு உட்பட்டது – இது குறித்து இதுவரை விவாதிக்கவில்லை.

எனவே, 14 நாள் காலக்கெடுவிற்குப் பிறகும் தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம் நாடாளுமன்றத்தைத் திறக்கவில்லை என்றால், அம்னோ என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்விக்குப் பதில் இல்லை, கட்சி இன்னும் விவாதித்து முடிவு செய்யப்படவில்லை.

குறிப்பிட்ட காலம் காலாவதியான பிறகு, அம்னோ பிஎன் அரசாங்கத்தை விட்டு விலகுமா என்று கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

நாடாளுமன்றம் “விரைவில் திறக்கப்பட வேண்டும்” என்ற யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் அறிக்கை பல்வேறு விளக்கங்களுடன் விளக்கப்பட்டுள்ளது என்றும், அம்னோ அரசியல் பணியகத்தின் கூற்றுப்படி, அந்த ‘விரைவு’ என்பதன் விளக்கம் 14 நாட்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சர் விளக்கினார்.

“அது அம்னோ அரசியல் பணியகத்தின் பார்வை, உச்சமன்றத்தினது அல்ல. கொள்கையைப் பொறுத்தவரை, உச்சமன்றமே கொள்கையைத் தீர்மானிக்க முடியும்.

“அரசியல் பணியகத்தால் முன்மொழிய மட்டுமே முடியும், உச்சமன்றமே முடிவு செய்யும். எனவே அம்னோவின் (அரசியல் பணியகம்) திட்டம் 14 நாட்களுக்குள் மக்களவைக் கூட வேண்டும்.

ஆனால் கேள்வி என்னவென்றால், அப்படி நடக்காவிட்டால் (அந்தக் காலகட்டத்தில்), என்ன ஆகும்? என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? (அது) விவாதிக்கப்படவில்லை,” என்றார் அவர்.

அம்னோ தரப்பில், நாடாளுமன்றம் திறக்க வேண்டும் என்பதில் எந்த முரண்பாடும் இல்லை என்று அவர் கூறினார்.

கட்சியின் அரசியல் பணியகக் கூட்டத்தை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜூன் 20) அம்னோ நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அடுத்த நாள், ஓர் அறிக்கையில், அம்னோ தலைவர் டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, மலாய் ஆட்சியாளர்கள் கூறியதைப் போல, தேசியக் கூட்டணி நாடாளுமன்றத்தைத் திறப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க, அம்னோ 14 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது என்றார்.

இல்லையென்றால், “பொருத்தமான நடவடிக்கையைக்” கண்டுபிடிக்க, அம்னோ உச்சமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்தும் என்றார்.

ஜூன் 20 முதல் பதினான்கு நாட்கள் என்றால் ஜூலை 4-ஆம் தேதி விழும்.

அப்படியிருந்தும், அஜெண்டா டெய்லி அறிக்கையின்படி, அம்னோ முன்னாள் உச்சமன்ற உறுப்பினர், மொஹமட் நஸ்ரி அப்துல் அஜீஸ் அஹ்மத், ஜாஹித் வழங்கிய 14 நாள் காலக்கெடு “அபத்தமானது” என்று விவரித்தார், ஏனெனில் மக்களவை கூடுவதற்கு 28 நாட்களுக்கு முன்னதாக உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.

அம்னோ எம்.பி.க்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் முடிவு, மார்ச் மாத இறுதியில், கட்சியின் பொது மாநாட்டில் செய்யப்பட்டது.

குறிப்பிட்ட தேதி எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், ஆகஸ்ட் மாதத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்னோ சுட்டிக்காட்டினார்.