‘கடன் ஒத்திவைப்புக்கான நேர்காணல், இயக்குநர் பதவிக்கு விண்ணப்பித்தது போல் உள்ளது’

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) 3.0 காலகட்டத்தில், அரசாங்கம் வழங்கிய இலக்கு வைத்த கடன் ஒத்திவைப்பு, விண்ணப்பதாரர்களுக்குப் பெரும் சிக்கலைக் கொடுப்பதாக அம்னோ தலைவர் கூறியுள்ளார்.

அஹ்மத் ஜாஹித் ஹமிடி, விண்ணப்பதாரர்களிடமிருந்து பல புகார்களைப் பெற்றதாகக் கூறினார், அவர்கள் அதற்குத் தகுதி பெறுவதற்கான நேர்காணல் எவ்வளவு கடினமாக உள்ளது என்பதனைப் பகிர்ந்து கொண்டனர்.

“ஓர் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பித்தது போன்று, கடன் ஒத்திவைப்பைப் பெறுவதற்கான அவர்களின் நேர்காணல் உள்ளது. இது சொல்லப்படுவது போல அவ்வளவு எளிதானது அல்ல,” என்று அவர் கூறினார்.

அக்கேள்விகளில் சில, மொத்த சம்பளம் எவ்வளவு, எது எதற்காக சம்பளப் பணம் செலவழிக்கப்படுகிறது என இன்னும் பல உள்ளன என்று அவர் கூறினார்.

இறுதியில், கணக்கிடப்பட்ட சம்பளத்தின் நிலுவை, கார் கடனைச் செலுத்த போதுமானதாகக் கருதப்படுவதால், அவர் கடன் ஒத்திவைப்புக்குத் தகுதியானவர் இல்லை என்று வங்கி விண்ணப்பதாரருக்கு அறிவித்துள்ளது என அஹ்மத் ஜாஹித் கூறினார்.

“நிச்சயமாக இது போதுமானதுதான் (கார் தவணை கொடுப்பனவுகளுக்கு), ஆனால் வீட்டு வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் முழு குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்ய இது போதுமானதா?” என்று அவர் சமூக ஊடகங்கப் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.

தற்காலிகத் தடையைப் பெற விரும்பும் சிறு வணிகர்களுக்கும் வங்கி பல நிபந்தனைகளை விதித்துள்ளது என்று அஹ்மத் ஜாஹித் மேலும் கூறினார்.

சிறு வணிகர்களுக்கு, வங்கி அறிக்கைகள் மற்றும் உள்ளூர் வணிகப் பதிவுகளைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை என்பதே பிரச்சினை என்று ஜாஹித் கூறினார்.

பல சிறு வர்த்தகர்களிடமும், சம்பளச் சீட்டுகள், தொழிலாளர் சேமநிதி அறிக்கைகள் அல்லது சுய வேலை என்பதால் பணிநீக்க கடிதங்கள் இல்லை என்று அவர் கூறினார்.

சில விண்ணப்பதாரர்களுக்கு ஒத்திவைப்பு வழங்கப்பட்ட போதிலும், அந்தக் காலகட்டத்தில் அவர்கள் ஒவ்வொரு மாதமும் வட்டி செலுத்த வேண்டியிருந்தது.

“ஆக, இது அவர்கள் கூறுவது போல எளிதானது அல்ல.

“நீங்கள் மக்களுக்கு உதவ விரும்பினால், முடிந்தவரை முழு மனதுடனும் நேர்மையுடனும் உதவுங்கள், அதிகமாக எதிர்பார்க்காதீர்கள்,” என்று அவர் கூறினார்.