கணபதி மரணம் : மற்றொரு மலேசியாகினி செய்தியாளரிடம் விசாரணை

மலேசியாகினி செய்தி நிறுவனம் வெளியிட்ட மூன்று கட்டுரைகள் தொடர்பாக, மற்றொரு செய்தியாளரின் சாட்சியத்தைப் போலீசார் இன்று எடுத்தனர்.

அந்த மூன்று கட்டுரைகளும், கடந்த பிப்ரவரி மாதம், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்துபோன, பால் வர்த்தகர் ஏ கணபதி (40) தொடர்பானவை.

மலேசியாகினி செய்தியாளர் பி நந்தகுமார், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மலேசியாகினி அலுவலகத்தில், இன்று காலை 10 மணிக்குச் சாட்சியம் அளித்தார், கணேசலிங்கம் & கோ சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் கீ ஹுய் யீ அவருடன் இருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியமளிக்கும் மூன்றாவது மலேசியாகினி ஊழியர் நந்தா ஆவார்.

முன்னதாக, மே 18-ல், மலேசியாகினி துணை ஆசிரியர்கள் ருஸ்னிஸம் மஹாத் மற்றும் எய்டி அஸ்ரி அப்துல்லா இருவரும் கோலாலம்பூர், புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்தில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டனர்.

பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில், பொது தேசத் துரோகத்தை ஏற்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (பி)-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது எனக் கூறப்படுகிறது.