ஆய்வு : ஊழல்களால் கட்டுமானச் செலவுகள் 15 விழுக்காடு அதிகரிப்பு

பொருட்களின் விலை உயர்வு மட்டுமின்றி, சொத்து மேம்பாட்டு செலவினங்களில், 14.8 விழுக்காடு அதிகரிப்புக்குக் காரணம் ‘ஊழல்’ என ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

“விநியோகச் சங்கிலியில் ஊழல் : நுகர்வோர் மீதான வடிவங்களும் தாக்கங்களும்” (“Corruption in the Supply Chain: Forms and Impacts on Consumers”) என்ற அறிக்கை, கட்டுமானம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய மூன்று துறைகளில் ஊழல் எவ்வாறு நிகழ்கிறது என்பதற்கான ஆழமான ஆய்வுகளைக் கொண்டுள்ளது.

இந்த அறிக்கையை ஜனநாயக மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான நிறுவனம் (ஐடியாஸ்) [Institut Hal Ehwal Demokrasi dan Ekonomi (Ideas)] மற்றும் வணிக நேர்மை கூட்டணி (சிபிஐ) ஆகியவை [Coalition for Business Integrity (CBI)] தயாரித்துள்ளன.

இந்த ஆய்வின் நோக்கம், மற்றவற்றுடன், ஊழல் எவ்வாறு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை உயர்த்துகிறது என்பதைக் காண்பிப்பதற்காக என ஐடியாஸ் ஆராய்ச்சி மேலாளர் ஸ்ரீ முர்னியாத்தி யூசுப் சொன்னார்.

“கடந்த ஆண்டு அத்தொழில்துறை சார்ந்தோரில் நூற்றுக்கணக்கானவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டது. கூடுதலாக, சிபிஐ-யும் ஐடியாஸ்-உம், இந்த மூன்று துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்களுடன் இரண்டு நாள் வட்டமேசை விவாதத்தையும் நடத்தியது.

“கட்டுமானத் துறையில், ஊழல் குறிப்பாக, வளர்ச்சி கட்டத்திலும், வளர்ச்சிக்கு முன்பும் நிகழ்கிறது.

“நிலம் மாற்றுவதற்கும், கட்டுமான வரைவுத் திட்டங்களைச் சமர்ப்பிக்கும் தருணத்திலும் பல கையூட்டுகள் நிகழ்வதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். வெளிநாட்டு தொழிலாளர்களுக்காகவும் நிறைவு சான்றிதழ்களைப் பெறவும்கூட கையூட்டு வழங்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

நேர்முகத் தேர்வாளர்களில் ஒருவர், சொத்து மேம்பாட்டுச் செலவில் சுமார் நான்கு முதல் 14 விழுக்காடு வரையில் கட்டுமான செலவில் ஈடுசெய்யப்படுகிறது என்று கூறினார்.

“அபிவிருத்தி கட்டத்தின் போது, ​​முகான்மை மேம்பாட்டாளர்களிடமிருந்து குத்தகையை பெறுவதற்கு, வெளிநாட்டு தொழிலாளர்களை எடுக்க மற்றும் கட்டுமானப் பொருட்களை வாங்கும் போது கையூட்டு வழங்கப்படுகிறது. பணி நிறைவு சான்றிதழ்களைப் பெறவும் பல்வேறு கொடுப்பனவுகள் (செய்யப்படும்)” என்று அவர் கூறினார்.

முகான்மை மேம்பாட்டாளர் ஒரு திட்டத்திற்காக சுமார் 200 வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தலாம் மற்றும் தொழிலாளர்களுக்கு ஐந்தாண்டு ஒப்பந்தத்தைப் பெற சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு RM500 முதல் RM1,000 வரை கையூட்டு கொடுக்கலாம் என்று நேர்காணலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

நேர்காணலில் பங்களித்த பலர் – ஊழல் நடைமுறைகள் சுமையாக இருப்பதை அறிந்திருந்தாலும் – “பொழுதுபோக்கு” மற்றும் ‘உணவு செலவினங்களை’ ஊழலின் ஒரு வடிவமாக கருதவில்லை, மாறாக வணிகச் செலவுகளை மட்டுமே அவர்கள் ஊழலாக கருதுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.