‘ஐரோப்பாவின் 5 மில்லியன் தடுப்பூசிகளுக்கு என்ன நேர்ந்தது?’

மலேசியாவுக்கு அனுப்பப்பட்டதாக ஐரோப்பா கூறிய ஐந்து மில்லியன் மருந்தளவு தடுப்பூசிகளின் நிலையைத் தெளிவுபடுத்துமாறு அமைச்சர் கைரி ஜமாலுதீனிடம் கேட்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியம் கோவிட் -19 தடுப்பூசிகளை ஏகபோகப்படுத்துவதாகக் கூறிய கைரியின் குற்றச்சாட்டுகளை ஐரோப்பிய ஒன்றியத் தூதர் மிச்சாலிஸ் ரோகாஸ் மறுத்துள்லதால், இந்தத் தெளிவு தேவை என்று, இன்று ஓர் அறிக்கையில், டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

“கைரி குற்றம் சாட்டியது போல், ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பூசியை ஏகபோகப்படுத்தவில்லை என்றால், அந்த 5 மில்லியன் மருந்தளவுகளுக்கு என்ன நேர்ந்தது, அது எவ்வாறு மலேசியர்களுக்கு விநியோகிக்கப்பட்டது, எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது பற்றிய முக்கியமான கேள்விகள் எழுகின்றன,” என்று லிம் கூறினார்.

கோவாக்ஸ் திட்டத்தின் மூலம், மலேசியாவிற்கு 4.87 மில்லியன் மருந்தளவு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளும் 560,000 மருந்தளவு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகளும் அனுப்பப்பட்டதாக, ஜூன் 15-ம் தேதி புள்ளிவிவரங்கள் காட்டியதாக, நேற்று ரோகாஸ் கூறினார்.

ஒப்புதல் செயல்முறைகளுக்கு, அதிகபட்சம் மூன்று நாட்கள் ஆனது என்று ரோகாஸ் கூறினார்.

மலேசியாவுக்கான ஐரோப்பாவின் தடுப்பூசிகள் தாமதமாகின்றன, அதே நேரத்தில் இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதன் தடுப்பூசிகள் பல முறை மக்களுக்குச் செலுத்தப்படுகின்றன என்ற கைரியின் குற்றச்சாட்டுகளுக்கு ரோகாஸ் பதிலளித்தார்,

ஜூன் 21 நிலவரப்படி, நாட்டின் சுமார் 23.41 மில்லியன் பெரியவர்களில் 18.73 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு மருந்தளவு கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். புத்ராஜெயா இந்த ஆண்டு இறுதிக்குள் 80 விழுக்காடு மக்களுக்குத் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மெதுவாக நகரும் தடுப்பூசி திட்டத்திற்குப் புத்ராஜெயா மற்றவர்களைக் குறை கூறக்கூடாது என்றும், அதற்குப் பதிலாக கொள்முதல் செயல்பாட்டில் உள்ள பலவீனங்களை ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் லிம் கூறினார்.