டிஏபி-யின் ராமசாமி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன் நிறுத்தப்படுவார்

டிஏபி தலைவர் கர்பால் சிங்-கை “ஞானாசிரியர்” என அழைத்தற்காக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள பினாங்கு மாநில டிஏபி துணைத் தலைவர் பி ராமசாமி அந்தக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு முன்பு நிறுத்தப்படுவார்.

அந்த விவகாரம் தொடர்பில் ராமசாமிக்கு எதிராக கம்போங் ஜுரு தொகுதித் தலைவர் தான் ஆ ஹுவாட்-டிடமிருந்து கட்சிக்கு புகார் கிடைத்துள்ளதாக டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறினார்.

டிசம்பர் 8ம் தேதி, தான், அந்தப் புகார் கடிதத்தை அனுப்பியிருப்பதாகவும் மேல் நடவடிக்கைக்காக அது ஒழுங்கு வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கர்பால் சொன்னார்.

ராமசாமி தமது “ஞானாசிரியர்” கருத்தை மீட்டுக் கொண்டு கர்பாலிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தவறினால் கட்சி அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கும் என கர்பாலிடம் அதற்கு முன்னர் கேட்கப்பட்டது.

“டிஏபி நடைமுறைகளை யார் பின்பற்றா விட்டாலும் அவர் எந்த உயர் பதவியில் இருந்தாலும் எவருக்கு எதிராகவும் கட்சி நடவடிக்கை எடுக்க முடியும். அது சாதாரணமானது,” என அந்த டிஏபி தலைவர் நிருபர்களிடம் கூறினார்.

TAGS: