மக்களின் மனம் கவர்ந்த மருத்துவர் சந்திரா

இராகவன் கருப்பையா- பஹாங் மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்றான பெந்தோங்கில் டத்தோ  டாக்டர் சந்திரசேகரனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.

பெந்தோங் மாவட்ட மருத்துவமனைக்கு இயக்குனாரப் பணியாற்றிய காலத்தில் ஒரு மருத்துவராக மட்டுமின்றி அங்குள்ள மக்களுக்குத் தேவையான சகல உதவிகளுக்கும் கூப்பிட்ட குரலுக்கு மறுகணமே களமிறங்கும் ஒரு சமூக சேவையாளராகவும்  கோலோச்சியவர்தான் டாக்டர் சந்திரா.

சிலாங்கூர் பந்திங்கில் உள்ள சுங்ஙை புவாயா தோட்ட பால்மரத் தொழிலாளர்களான இராமன் – நாகம்மா தம்பதியினரின் 9 பிள்ளைகளில் 4ஆவதாகப் பிறந்தவர்தான் இந்த சாதனையாளர்.

அதே தோட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளியில் தமது ஆரம்பக் காலக் கல்வியையும் தெலுக் டத்தோ இடைநிலைப்பள்ளியில் 5ஆம் படிவம் வரையிலும் பயின்ற இவர் பிறகு தமிழகம் சென்று மனிப்பால் மருத்துவக் கல்லூரியில் தமது பட்டப்படிப்பை முடித்தார்.

நாடு திரும்பியவுடன் கிளேங் மருத்துவமனையில் 3 ஆண்டுகளும்  பஹாங்கின் பெக்கான் நகரில் சுமார் 1 ஆண்டும் பணியாற்றிய பிறகு குவாந்தான் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

கடந்த 1986ஆம் ஆண்டில் விக்னேஸ்வரி எனும் வழக்கறிஞரை கரம் பிடித்த க்டர் சந்திரா, நெகிரி செம்பிலான் – பஹாங் – ஜொகூர், ஆகிய 3 மாநிலங்களும் சந்திக்கும் இடத்தில் உள்ள பாலோங், ஃபெல்டா நிலக்குடியேற்றப் பகுதியில் பணியாற்றியது மறக்க முடியாத ஒரு அனுபவம் என்று நினைவு கூறுகிறார்.

அடர்ந்த காட்டுப் பகுதியான அங்கு மின்சாரமும் இல்லை குழாய் நீரும் இல்லை.

‘பேட்டரி’ எனும் ஒரு சிறிய மின்கலத்தின் வழி மின்சாரம் இணைக்கப்பட்ட வேளையில், தண்ணீர் தேவைகளுக்கு அவ்வப்போது சுமையுந்துகளில்  கொண்டு வரப்படும் சேவைகளைத்தான் அங்குள்ளவர்கள் நம்பியிருந்தார்கள்.

அந்த சிரிய மருத்துவமனையில் பாம்பு மற்றும் உடும்பு போன்ற விலங்குகள் கூட அடிக்கடி நுழைந்துவிடும் என்று கூறும் அவர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சிரம்பான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சுமார் 8 ஆண்டுகளுக்கு அங்கு பணியாற்றிய பிறகு பதவி உயர்வு பெற்று சரவாக் மாநிலத்தில் உள்ள பிந்துலு மருத்துமனையின் இயக்குனராக பொருப்பேற்றார் டொக்டர் சந்திரா.

இடைப்பட்ட காலத்தில் நியூஸிலாந்து சென்று மருத்துவம் தொடர்பான சிறப்புக்கல்வியை மேற்கொண்ட அவர் கடந்த 1996ஆம் ஆண்டில் பெந்தோங் மாவட்ட மருத்துவமனையின் இயக்குநராக தமதுப் பணிகளைத் தொடர்ந்தார்.

அதற்கென, மருத்துவமனை நிர்வாகம் மீதான முதுகலைக் கல்வியை பயில்வதற்கு அரசாங்கம் அவரை மனிலாவுக்கு அனுப்பி வைத்தது.

நாட்டிலுள்ள மாவட்ட மருத்துவமனைகளில் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படும் மருத்துவமனைகளில் ஒன்றாக பெந்தோங் மாவட்ட மருத்துவ மனையை ருமாற்றம் செய்த டொக்டர் சந்திராவுக்குத் தேசிய ரீதியிலும் அனைத்துலக அளவிலும் பல்வேறு விருதுகள் குவியத் தொடங்கின.

இந்திய மருத்துவத்துறை மற்றும் அயர்லாந்து நாட்டின் ‘ஃபெலோஷிப்’ விருதுகளைப் பெற்ற அவர், பொதுச் சேவைக்கான ஐக்கிய நாட்டு விருதையும் பெற்றார்.

நம் நாட்டின் பிரதமர் விருது, பஹாங், நெகிரி செம்பிலான் ஆகிய மாநில ஆளுநர்களின் .எம்.சி., ஏ.எம்.என்., ஏ.எம்.பி., எஸ்.ஏ.பி., ஆகிய விருதுகளோடு டத்தோ விருதும் வழங்கி கௌரவப்படுப்பட்டார்.

பெந்தோங் மருத்துவமனையை ஒரு சுகாதார மையமாக மட்டுமின்றி மக்களின் மனம் கவரும் தோழமைமிக்க ஒரு மாபெரும் இல்லமாக மாற்றியமைத்த டொக்டர் சந்திரா அரசாங்க ஒதுக்கீடு போதாத சூழ்நிலையிலும் சுய முயற்சியில் அங்குள்ள தொழிலதிபர்களின் உதவியை நாடி அந்த மருத்துவமனையைச் சீரமைத்து விரிவுபடுத்தினார்.

அதன் வளாகத்தில் நிறைய மரங்களை நட்டு பச்சை நிற சுற்றுச் சூழலை உருவாக்கி, வாகனம் நிறுத்தும் இடங்களை விரிவு படுத்தி, படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்த அவர் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் கட்டொழுங்கையும் செம்மைப்படுத்தி ‘பூஜ்ஜியம் புகார்’ எனும் நிலைக்கு அம்மருத்துவமனையை மேம்படுத்தினார்.

‘டயலிஸிஸ்’ எனப்படும் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு வசதிகள் போன்ற சிறப்புப் பிரிவுகளை அமைத்து மருத்துவர் எண்ணிக்கையை 4லிருந்து 22ஆக அதிகரிக்க வகை செய்து நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தை வெகுவாகக் குறைக்க வகை செய்த டொக்டர் சந்திராவை பெந்தோங் மாவட்டத்தில் உள்ளவர்கள் சுலபத்தில் மறந்துவிட முடியாது.

பதவி ஓய்வு பெரும் காலத்தில் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் 5 ஆண்டுகளுக்கு அங்கேயே அவருடைய சேவை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ஆம் ஆண்டில் பதவி ஓய்வு பெற்ற டொக்டர் சந்திராவின் ஒரே மகனான வரூபனும் ஒரு மருத்துவராகக் கோலாலம்பூரில்  பணியாற்றுகிறார்.